search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தனூர் அணையை படத்தில் காணலாம்.
    X
    சாத்தனூர் அணையை படத்தில் காணலாம்.

    குடிநீர் தேவைக்காக சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு

    குடிநீர் தேவைக்காக சாத்தனூர் அணையில் தண்ணீர் திறக்க கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார். அதன்படி பொதுப் பணித்துறை அதிகாரிகள் இன்று காலை அணையில் இருந்து தண்ணீரை திறந்தனர்.
    திருவண்ணாமலை:

    விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணையாற்றில் அமைந்துள்ள கூட்டுக் குடிநீர் திட்ட நீராதார கிணறுகளின் தேவைக்காக சாத்தனூர் அணையிலிருந்து 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் சாத்தனூர் அணை உள்ளது. 119 அடி உயரமுள்ள இந்த அணையில் வலது மற்றும் இடது புற கால்வாய் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இதன்மூலம் திருவண்ணாமலை நகரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    கர்நாடகத்தில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நீர்வரத்தையடுத்து கிருஷ்ணகிரி அணை நிரம்பியது. அந்த அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதையடுத்து சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதற்கு முன்பு அணையின் நீர்மட்டம் 72.55 அடியாக இருந்தது. மேலும் 995 மில்லியன் கன அடி நீர் இருப்பில் இருந்தது.

    தொடர்ந்து வந்த நீர்வரத்தின் காரணமாக அணை நீர்மட்டம் 100.2 அடியாக வேகமாக உயர்ந்தது.

    சாத்தனூர் அணையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணையாற்றில் உள்ள கூட்டுக்குடிநீர் திட்ட நீராதார கிணறுகளின் தேவைக்காக ஆற்றில் நீரோட்டம் ஏற்பட செய்து செரிவூட்டுதலுக்காக இன்று முதல் வினாடிக்கு 750 கன அடி வீதம் தொடர்ந்து 5 நாட்கள் தண்ணீர் திறக்க கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார். அதன்படி பொதுப் பணித்துறை அதிகாரிகள் இன்று காலை அணையில் இருந்து தண்ணீரை திறந்தனர்.

    இதன் மூலம் தென்பெண்ணையாற்றில் நாளொன்றுக்கு 64.80 மில்லியன் கன அடி வீதம் ஆக மொத்தம் 324 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது என தெரிவித்துள்ளனர்.



    Next Story
    ×