search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளிதிருப்பூர் அருகே டெங்கு  காய்ச்சலுக்கு 4-ம் வகுப்பு மாணவி பலி
    X

    வெள்ளிதிருப்பூர் அருகே டெங்கு  காய்ச்சலுக்கு 4-ம் வகுப்பு மாணவி பலி

    டெங்கு  காய்ச்சலுக்கு 4-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார். மகளின் உடலை கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதகாட்சி பரிதாபமாக இருந்தது.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதுவரை 26-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோய்க்கு பலியாகி உள்ளனர்.

    மேலும் நூற்றுக்கணக்கான பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இப்போது மேலும் ஒரு பள்ளி மாணவி டெங்கு நோய்க்கு பலியாகி உள்ளார்.

    ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் அருகே உள்ள மூளையூரை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகள்சுதர்ஷினி (வயது 9) இவள் அருகே உள்ள விராலி காட்டூர் அரசு பள்ளியில் 4-ம் வகுப்புபடித்து வந்தாள்.

    மாணவி சுதர்ஷினிக்கு கடந்த ஒருவாரமாக காய்ச்சல் அடித்தது. உள்ளூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தாள்.

    அங்கு அவளுக்கு டெங்கு அறிகுறி தென்படவே உடனே மேல்சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினர். நேற்று இரவு மழை பெய்ததால் இன்று காலையில் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்க முடிவு செய்திருந்தனர்.

    அதன்படி இன்று அதிகாலை 5 மணியளவில் மாணவியை ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாணவி சுதர்ஷினி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மகளின் உடலை கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதகாட்சி பரிதாபமாக இருந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு நோயை பரப்பும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகும் எனவே முக்கிய இடங்களில் கொசுக்களை ஒழிக்க கொசு மருந்து புகை அடிக்க வேண்டும் டெங்கு நோயை கட்டுப்படுத்த வேண்டும் என ஈரோடு மாவட்ட மக்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×