search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 9 பேர் விடுவிப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
    X

    கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 9 பேர் விடுவிப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    கும்பகோணம் பள்ளி தீ விபத்து மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, குற்றம்சாட்டப்பட்ட 9 பேரை விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
    மதுரை:

    கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் 16.7.2004 அன்று சமையல் அறையில் பற்றிய தீ மேலே இருந்த வகுப்பறைகளுக்கும் பரவி 94 குழந்தைகள் உயிரிழந்தனர். 18 குழந்தைகள் பலத்த தீக்காயம் அடைந்தனர். இது தொடர்பாக பள்ளி நிறுவனர் பழனிச்சாமி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியைகள் உள்ளிட்ட 24 பேர் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

    நீண்ட காலமாக நீடித்த இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், 2014ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், தாளாளர் சரஸ்வதி, சமையலர் வசந்தி உள்ளிட்ட 10 பேருக்கு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. 11 பேர் விடுவிக்கப்பட்டனர்.

    11 பேரை விடுவித்ததை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதேபோல் தண்டனையை ரத்து செய்யக்கோரி சிறையில் உள்ளவர்கள் மனு தாக்கல் செய்தனர். சிறைத்தண்டனை பெற்ற தாளாளர் சரஸ்வதி உடல்நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டு மரணம் அடைந்தார்.



    மேல்முறையீட்டு வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்ட 9 பேரை விடுவித்தும், சமையலர் சரஸ்வதியின் தண்டனையை உறுதி செய்தும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.
    Next Story
    ×