search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியாத்தத்தில் தினகரன் ஆதரவு பெண் எம்.எல்.ஏ. பேனர் மீண்டும் கிழிப்பு
    X

    குடியாத்தத்தில் தினகரன் ஆதரவு பெண் எம்.எல்.ஏ. பேனர் மீண்டும் கிழிப்பு

    குடியாத்தத்தில் தினகரன் ஆதரவு பெண் எம்.எல்.ஏ. பேனர் மீண்டும் கிழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    குடியாத்தம்:

    அ.தி.மு.க. அம்மா அணியில் 60 பேருக்கு, கட்சியில் புதிய பதவி வழங்கி துணை பொதுச் செயலாளர் டி.டி.தினகரன் பெயர் பட்டியலை வெளியிட்டார்.

    இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.வடிவேல், எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளராகவும், பாலசுப்பிரமணி எம்.எல்.ஏ. புரட்சி தலைவி பேரவை இணை செயலாளராகவும், ஜெயந்தி பத்மநாபன் எம்.எல்.ஏ. மகளிரணி இணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஜெயந்தி பத்மநாபன் எம்.எல்.ஏவுக்கு மகளிர் அணி இணை செயலாளராக புதிய பதவி வழங்கியதற்கு வாழ்த்து தெரிவித்து குடியாத்தம் நகராட்சி அலுவலகம் எதிரே வாழ்த்து பேனர் வைத்திருந்தனர்.

    பேனரில் சசிகலா, தினகரன் மற்றும் ஜெயந்தி பத்மநாபன் எம்.எல்.ஏ. படம் இடம் பெற்றிருந்தது. கடந்த சனிக்கிழமை இரவு நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், பேனர் மீது கல்வீசி தாக்கினர்.

    கல் வீசியதில் பேனரில் இருந்த சசிகலா படம் கிழிந்தது. இது குறித்து எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் கல்வீசியதில் சேதமடைந்த பேனரை ஒட்டி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் மீண்டும் அந்த பேனரை பிளேடால் சரமாரியாக வெட்டி கிழித்துள்ளனர். பேனர் மீண்டும் கிழிக்கப்பட்டிருப்பதை பார்த்து எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    குடியாத்தம் பகுதி அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி, ஆதரவாளர்கள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

    அவர்கள் ஜெயந்தி பத்ம நாபன் எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் எம்.எல்.ஏ. தரப்பினர் பேனர் கூட வைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்தால் குடியாத்தத்தில் அ.தி.மு.க.வினரியே பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
    Next Story
    ×