search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமலா
    X
    விமலா

    ஈரோடு மாவட்டத்தில் ‘மர்ம’ காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் பலி

    ஈரோடு மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர். மர்ம காய்ச்சலுக்கு பலர் பலியாகி வருவதையொட்டி தடுப்பு நடவடிக்கை ஈரோட்டில் முழு வீச்சில் நடந்து வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 15-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    தற்போது டெங்கு காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர். சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமலையை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி தங்கவேல் மனைவி விமலா (வயது 27).

    விமலாவுக்கு கடந்த 4 நாட்களாகவே காய்ச்சல் அடித்தது. இதையொட்டி அவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். காய்ச்சல் குறையாததால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதை கண்டனர். இதையொட்டி டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சையில் இறங்கினர்.

    பிறகு அவர் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    பவானி அந்தியூர், அம்மாபேட்டை பகுதியில் தான் டெங்கு காய்ச்சலுக்கு பலர் இறந்துள்ளனர். ஆனால் சத்தியமங்கலத்தில் முதன் முதலாக டெங்கு காய்ச்சலுக்கு ஒரு பெண் பலியாகி இருப்பது அப்பகுதி மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொடுமுடி அருகே உள்ள கொள்ளுக்காட்டு வலசு காலனியை சேர்ந்தவர் நல்லமுத்து இவரது மகள் நந்தினி (17). இவர் தாமரைபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவி நந்தினிக்கு கடந்த ஒரு வாரமாகவே மர்ம காய்ச்சல் இருந்தது. கொடுமுடி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாணவி நந்தினியை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாபமாக இறந்தார். ஈரோடு மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு பலர் பலியாகி வருவதையொட்டி தடுப்பு நடவடிக்கை முழு வீச்சில் நடந்து வருகிறது.



    Next Story
    ×