search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிர்லா கோளரங்கத்தில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் தங்கள் படைப்புகளை விளக்கி கூறும் காட்சி
    X
    பிர்லா கோளரங்கத்தில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் தங்கள் படைப்புகளை விளக்கி கூறும் காட்சி

    இந்திய-ரஷிய உறவுக்கு அடையாளம் கூடங்குளம் அணுமின் நிலையம்: ரஷிய அறிவியல் பண்பாட்டு மைய இயக்குனர்

    ‘இந்திய-ரஷிய உறவுக்கு அடையாளம் கூடங்குளம் அணுமின் நிலையம்’ என்று ஷிய அறிவியல் பண்பாட்டு மைய இயக்குனர் மிக்கையில் கோர்படோவ் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நடந்த அறிவியல் திருவிழாவில் கலந்து கொண்ட ரஷிய அறிவியல் பண்பாட்டு மைய இயக்குனர் மிக்கையில் கோர்படோவ், ‘இந்திய-ரஷிய உறவுக்கு அடையாளம் கூடங்குளம் அணுமின் நிலையம்’ என்று தெரிவித்தார்.

    ரஷிய அணு ஆற்றல் கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்துடன் இணைந்து கிண்டி காந்தி மண்டபம் சாலையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் அறிவியல் திருவிழா நடத்துகிறது. இதன் தொடக்கவிழா நேற்று காலை பிர்லா கோளரங்க வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவுக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் நிர்வாக இயக்குனர் பி.அய்யம்பெருமாள் தலைமை தாங்கினார். இதில் ரஷிய அறிவியல் பண்பாட்டு மையத்தின் இயக்குனர் மிக்கையில் கோர்படோவ், மும்பை அணு ஆற்றல் துறையின் விஞ்ஞானி எஸ்.கே.மல்கோத்ரா, ரஷிய தூதரக துணை தூதர் அலெக்செ வாஸ்கோவ், ரொசாட்டம் நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி அலெக்ஸாண்டர் ஆண்டோபின், பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இணை இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் மற்றும் துணை இயக்குனர் வள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அணு ஆற்றல் பற்றி தொடக்க அறிவினை உள்ளடக்கிய ‘அணுக்கரு அரிச்சுவடி’ என்ற தமிழ்நூல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ரஷிய அறிவியல் பண்பாட்டு மையத்தின் இயக்குனர் மிக்கையில் கோர்படோவ் பேசியதாவது:-

    சோவியத் யூனியன் இருந்த காலத்திலே இந்தியாவுடன் நல்ல உறவு இருந்தது. சோவியத் யூனியன் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு உதவியது. குறிப்பாக மக்களை பாதுகாக்க ராணுவத்துக்கு தேவையான நவீன தொழில் நுட்பங்களை வழங்கியது. அதன்பின்னர், ரஷியாவாக மாறிய பிறகும் இந்தியாவுடனான நட்பு உறவு தொடருகிறது.

    இந்த உறவுக்கு அணு மின்நிலையம் ஒரு அடையாளமாக உள்ளது. அதிலும் குறிப்பாக கூடங்குளம் அணு மின்நிலையம் இருக்கிறது. அணு உலையால் இந்தியாவின் பொருளாதாரம் முன்னேறும். அணு உலை என்றால் என்ன? என்பது குறித்தும், நவீன அறிவியல் குறித்தும் இந்த காலத்து மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அறிவியல் திருவிழாவின் தொடக்க நாளில் ‘அணு ஆற்றல் பற்றிய மக்களின் கருத்துகள்: புதிரும், உண்மையும்’, அணு ஆற்றலும் அதன் பயன்களும் என்ற தலைப்புகளில் கருத்தரங்குகளும், விவாதங்களும் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து ‘பசுமையான உலகினை உருவாக்க அணு ஆற்றல் நிலையங்கள்’ என்ற தலைப்பில் கண்காட்சியும், ஓவிய போட்டியும் நடைபெற்றன. நாளை (வியாழக்கிழமை) வரை இந்த அறிவியல் திருவிழா நடைபெறுகிறது.
    Next Story
    ×