search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து கருவாட்டு வியாபாரிகள் போராட்டம்
    X

    ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து கருவாட்டு வியாபாரிகள் போராட்டம்

    கருவாடுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதை கண்டித்து மாநில அளவில் போராட்டத்தில் ஈடுபட திருச்சியில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    திருச்சி:

    தமிழ்நாடு அனைத்து மீனவர்கள் மற்றும் கருவாடு வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்துக்கு நாகையை சேர்ந்த மீனவர் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சாமிக்கண்ணு முன்னிலை வகித்தார்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொருளாளர் கோவிந்தராஜூலு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். திருச்சி கருவாடு மண்டி வியாபாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நஜீம் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் மத்திய அரசு கருவாடுக்கு 5 சதவீதம் சேவை வரியை விதித்து இருப்பது ஏழை, எளிய உழைக்கும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிப்பதாக உள்ளது.

    நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை மத்திய, மாநில அரசுகளால் உப்புக் கருவாடு மற்றும் உலர்ந்த கருவாடுக்கு எந்தவித வரியும் விதித்தது இல்லை.

    இந்த நிலையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள வரியானது இந்த தொழிலை அடியோடு அழித்து விடும். எனவே மத்திய அரசு கருவாடுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத சரக்கு, சேவை வரியை ரத்து செய்ய வேண்டும்.

    அழுகும் பொருளான கருவாடுக்கு விதிக்கப்பட்ட சரக்கு, சேவை வரியை முழுமையாக ரத்து செய்யாத பட்சத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர் அமைப்புகள், மீனவ சமுதாய தலைவர்கள், கருவாடு வியாபாரிகள் சென்னையில் கூடி கலந்து ஆலோசனை செய்து மாநில அளவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் சென்னை காசிமேடு, ராமேசுவரம், நாகை, ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மீனவர் மற்றும் கருவாடு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், விசைப்படகு, நாட்டுப் படகு மீன்பிடி மீனவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×