search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் ஆழ்குழாய் கிணற்றில் ‘திடீர்’ வாயு கசிவு
    X

    ஹைட்ரோ கார்பன் ஆழ்குழாய் கிணற்றில் ‘திடீர்’ வாயு கசிவு

    புதுக்கோட்டை நல்லாண்டார் கொல்லையில் ஓ.என். ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து சில தினங்களாக வாயு கசிவதால் கண் எரிச்சல், மயக்கம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் நல்லாண்டார் கொல்லை, வடகாடு, வானக்கன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஓ.என். ஜி.சி. நிறுவனம் ஆழ்குழாய் கிணறு அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுக்க சோதனை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த பிப்ரவரி 15-ந்தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வட காடு, கோட்டைக்காடு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. தற்போது நெடுவாசலில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நல்லாண்டார் கொல்லையில் ஓ.என். ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றில் உள்ள ராட்சத குழாயில் இருந்து சில தினங்களாக வாயு கசிவு ஏற்பட்டு, அதனால் கண் எரிச்சல், மயக்கம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் நல்லாண்டார்கொல்லையில் உள்ள ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, நல்லாண்டார்கொல்லையில் குடியிருப்புக்கு அருகே ஓ. என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணறு உள்ளது. அப்பகுதியில் தான் எங்கள் விவசாய நிலங்கள் உள்ளன. தினமும் நாங்கள் அங்கு சென்று வேலை செய்ய வேண்டும்.

    கடந்த சில தினங்களாக ஆழ்குழாய் கிணற்றில் உள்ள ராட்சத குழாயில் இருந்து வாயு கசிந்து வெளியேறுகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் போது கண் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் அதை சுவாசிக்கும் போது தலைசுற்றல், மயக்கம் ஏற்படுகிறது. இதனால் எங்களுக்கும், குழந்தைகளுக்கும் தீங்கு நேரிடுமோ? என்ற அச்சமும், வாயு கசிவால் தீ விபத்து ஏற்படுமோ? என்ற அச்சமும் உள்ளது. எனவே மக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ள ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணற்றை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என்றனர்.

    இதனிடையே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி இன்று 83-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போராட்டத்தில் கதிராமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகளை தாக்கிய போலீசாரை கண்டித்தும், கைது செய்த விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய கோரியும் பேரணியாக சென்று, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    நாங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 2-வது கட்டமாக போராடி வருகிறோம். கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக போராடிய விவசாயிகளை மாநில அரசு போலீசாரை கொண்டு தடியடி நடத்தி அடக்கு முறையை கையாண்டுள்ளது. மத்திய, மாநில விவசாயிகளாகிய எங்களை துன்புறுத்தும் நோக்கத்தோடு செயல்படாமல், விவசாயத்தை அழிக்கும் இது போன்ற திட்டங்களை உடனடியாக ரத்து செய்து அறிவிக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×