search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முட்டை ‘பப்ஸ்’ சாப்பிட்ட 2 பேருக்கு மயக்கம்: பிளாஸ்டிக் முட்டையா? - அதிகாரிகள் விசாரணை
    X

    முட்டை ‘பப்ஸ்’ சாப்பிட்ட 2 பேருக்கு மயக்கம்: பிளாஸ்டிக் முட்டையா? - அதிகாரிகள் விசாரணை

    திருவள்ளூரில் முட்டை ‘பப்ஸ்’ சாப்பிட்ட 2 பேருக்கு மயக்கத்துடன் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. தியேட்டரில் விற்பனை செய்யப்பட்டது எந்த வகை முட்டை என்பது குறித்து சோதனை நடத்தி விசாரிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
    திருவள்ளூர்:

    முட்டை பப்ஸ் சாப்பிட்ட 2 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அது பிளாஸ்டிக் முட்டையா? என விசாரணை நடக்கிறது.

    திருவள்ளூர் மணவாளநகரில் உள்ள சினிமா தியேட்டரில் ‘தி மம்மி’ என்ற ஆங்கில படம் திரையிடப்பட்டுள்ளது. மாலைக்காட்சி படம் பார்க்க திருவள்ளூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த சூர்யா(21), அஜீத்(21), சிரஞ்சீவி(20) ஆகியோர் சென்றனர்.

    படத்தின் இடைவேளை நேரத்தின் போது அங்குள்ள கேன்டீனில் 3 பேரும் முட்டை பப்ஸ் வாங்கி சாப்பிட்டனர். அதனை சாப்பிடும் போது பிளாஸ்டிக்கை சாப்பிடுவது போல் கடினமாக இருப்பதாக கேன்டீனில் வேலை செய்பவர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு அதெல்லாம் ஒன்றுமில்லை எனக் கூறவே சூர்யா,அஜீத் ஆகிய 2 பேர் மட்டும் முட்டை பப்ஸ் முழுவதுமாக சாப்பிட்டனர். சிரஞ்சீவி என்பவர் சாப்பிட முடியாமல் வாந்தி வரும் சூழ்நிலை இருந்ததால் அதை சாப்பிடாமல் விட்டுவிட்டார்.



    படம் முடிவதற்கும் சூர்யா, அஜீத் ஆகிய 2 பேருக்கும் திடீர் என்று தலைசுற்றல் லேசான மயக்கத்துடன் வயிற்றுப் போக்கு ஏற்படவே பயந்து போய் உடனடியாக நண்பர்களை வரவழைத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தியேட்டரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணவாளநகர் போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    கேன்டீன் உரிமையாளர் மற்றும் விற்பனையாளர்களிடம் தீவிரமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்ததையடுத்து கலைந்து சென்றனர். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் சூர்யா, அஜீத் ஆகியோருக்கு தற்சமயம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சாப்பிட்டது முட்டை பப்ஸ்ல் பிளாஸ்டிக் கலந்து இருக்கலாம் என்று தெரிவித்தனர். தீவிர விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    தமிழகத்தில் தற்சமயம் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் ஆகியவை அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வதந்தி பரவி வருகிறது.

    ஆனால் இதற்கான விழிப்புணர்வு இல்லாததால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே அரசு இது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது பற்றி உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்டபோது, “சினிமா தியேட்டரில் விற்பனை செய்யப்பட்டது எந்த வகை முட்டை என்பது குறித்து சோதனை நடத்தி விசாரிக்கப்படும். கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×