search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமானுஜரின் கருத்துக்களை நாடு முழுவதும் பரப்ப உறுதிமொழி ஏற்போம்: மத்திய மந்திரி
    X

    ராமானுஜரின் கருத்துக்களை நாடு முழுவதும் பரப்ப உறுதிமொழி ஏற்போம்: மத்திய மந்திரி

    ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அவரது கருத்துக்களை நாடு முழுவதும் பரப்ப ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்போம் என்று மத்திய மந்திரி மகேஷ் சர்மா கூறினார்.
    திருச்சி:

    ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா திருச்சியை அடுத்த திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. விழாவிற்கு முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி கோபால்சாமி தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி மகேஷ் சர்மா கலந்து கொண்டு, ராமானுஜரின் கோட்பாடுகளை மக்களுக்கு சென்றடையும் வகையில் தொண்டாற்றி வருபவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரப்படுத்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமூக நல்லிணக்கத்தையும், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தையும் உருவாக்க பாடுபட்டவர் ராமானுஜர். ராமானுஜரின் புகழ் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருக்க காரணம் அவரது சேவை மனப்பான்மை தான். மத்திய அரசு சார்பில் ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழாவைக் கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    அவரது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு தபால் தலை வெளியிட்டு பிரதமர் பெருமைப்படுத்தி உள்ளார். ஆயிரமாவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ராமானுஜரின் கருத்துக்களை நாடு முழுவதும் பரப்ப ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஒரு மனிதன் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அறிய செயலை ராமானுஜர் செய்து காட்டி இருக்கிறார். மனித இனத்தின் வேறுபாடுகளை களைய மிகப்பெரிய சரித்திரம் செய்து இருக்கிறார். இந்த காலகட்டத்தில் ஒரு சிறிய பிரச்சினையை பூதாகரமாக்கி சாதி மோதல் ஏற்பட்டு சமுதாயம் சீரழிந்து கொண்டு இருப்பதை பார்க்கிறோம். ஆனால் ராமானுஜர் வெறும் போதனை மட்டும் இல்லாமல் செயலை நடத்தி காட்டி உள்ளார். இந்த ஆயிரமாவது ஆண்டை நாம் தூக்கி சுமந்து சென்றால், அடுத்த ஆயிரமாவது ஆண்டு வரை ராமானுஜர் நம்மை தூக்கி செல்வார். இந்து தர்மத்தை உலகறிய உயர்த்தியவர் ராமானுஜர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக விழாவிற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ராமானுஜர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சாதி இருக்க கூடாது என்பதில் உறுதியாக செயல்பட்டார். இன்று சமூக நீதி பேசுகிறவர்கள், கொள்கை உருவாக்க நினைக்கிறார்கள். ஒவ்வொருவரும் சாதி, ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்க வேண்டும், என்று கூறினார்.

    இதேபோல் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ஆயிரம் ஆண்டுக்கு முன்பே ராமானுஜர் சமூக நீதியை பேணியவர். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கியவர். தமிழில் வழிபட முடியும் என்பதை உணர்த்தியவர். தமிழக அரசியல் கட்சியினர், பாரதிய ஜனதா கட்சியை தமிழக கலாசாரத்திற்கு எதிரானது போல் சித்தரிக்கிறார்கள்.

    தமிழக கலாச்சாரத்தை தூக்கி பிடிப்பதில் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்பதை நிரூபிப்போம். காங்கிரஸ் அரசு ஊழலில் திளைத்து உள்ளது. பாரதிய ஜனதா கட்சியில் ஊழல் இல்லை. நேரடி மானியத்தில் ரூ.50 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பலம் பெற்று வருகிறது, என்று கூறினார்.
    Next Story
    ×