search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 6 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
    X

    ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 6 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

    தூத்துக்குடியில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டிய 6 போலீசாரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வகையில், தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 826 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் தூத்துக்குடி நகரில் 220 பேர் மீதும், புறநகரில் 107 பேர் மீதும், திருச்செந்தூரில் 110 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டத்தில் 57 பேர் மீதும், மணியாச்சியில் 33 பேர் மீதும், கோவில்பட்டியில் 142 பேர் மீதும், விளாத்திகுளத்தில் 102 பேர் மீதும், சாத்தான்குளத்தில் 55 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    மேலும் திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீசார் உள்பட 6 பேர், உடன்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பணியின்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி சென்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். இதில், குறிப்பிட்ட 6 போலீசார் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டியது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த 6 போலீசாரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
    Next Story
    ×