search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் புதிதாக திறந்த மதுக்கடையில் குடிமகன்களை கவர இலவசமாக மது விநியோகம்
    X

    திருப்பூரில் புதிதாக திறந்த மதுக்கடையில் குடிமகன்களை கவர இலவசமாக மது விநியோகம்

    திருப்பூரில் புதிய மதுக்கடை திறந்ததால் மகிழ்ச்சி அடைந்த குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் கொடுத்து மது வாங்கி சென்றனர்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு பதிலாக புது மதுக்கடைகள் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் பெண்கள் முன்னின்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    மேலும் மற்ற இடங்களில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி வயல் வெளிகளில் அவசர அவசரமாக ஹாலோபிளாக் மூலம் கட்டப்படும் மதுக்கடைகளையும் திறக்கக்கூடாது என்று மதுவுக்கு எதிரான பெண்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

    தமிழகத்தில் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான திருப்பூரில் மதுக்கடைக்கு எதிரான போராட்டம் தினமும் நடந்து வருகிறது. சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக பெண்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் மதுக்கடைக்கு எதிராக போராடுபவர்களின் அருகிலேயே செல்ல போலீசார் மறுக்கிறார்கள். இதனால் பொதுமக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

    திருப்பூர் கஞ்சம்பாளையம் ராதா நகரில் ஹலோபிளாக் கற்களை கொண்டு ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டிடம் குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கேட்டபோது பெட்டிக்கடை வைக்கப்போவதாக தகவல் தெரிவித்தனர்.

    அதனால் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. நேற்று திடீரென அந்த கட்டிடத்தில் டாஸ்மாக் பெயர் பலகையுடன் வந்த ஊழியர்கள் மதுபான பெட்டிகளை இறக்கி வைத்தனர். குடிமகன்களுக்கு இந்த கடை திறக்கப்பட்டது தெரியாததால் மதியம் வரை கூட்டம் வரவில்லை.

    இதனால் முதலில் கடைக்கு வந்த குடிமகன்களுக்கு இலவசமாக மதுபாட்டில்களை கொடுத்தனர். இந்த தகவல் காட்டூத்தீபோல் பரவியதால் அடுத்த சில மணி நேரத்தில் இந்த கடைக்கு ஏராளமான குடிகன்கள் படையெடுத்தனர். கூட்டம் அதிகமானதால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் இலவசமாக மதுகொடுத்துவிட்டு பின்னர் நிறுத்திவிட்டனர்.

    அப்போது குடிமகன்கள் எல்லோருக்கும் இலவசமாக மதுகொடுங்கள் என்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் புதிய மதுக்கடை திறந்ததால் மகிழ்ச்சி அடைந்த குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் கொடுத்து மது வாங்கி சென்றனர்.

    இதுபற்றி தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் புதிதாக திறந்த இந்த மதுக்கடையை மூட வேண்டும் என்றனர். அதற்கு போலீசார் இன்னும் 2 நாட்களில் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடக்கும் அப்போது உங்கள் கோரிக்கையை தெரிவியுங்கள் என்றனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதேபோல் மதுக்கடைக்கு எதிராக திருப்பூரில் வெள்ளியங்காடு, அங்கேரிபாளையம் பகுதிகளில் சாலைமறியல் போராட்டம் நடந்தது.

    வெள்ளியங்காடு பகுதியில் பொதுமக்கள் சாலைமறியல் செய்த இடத்தில் குடிமகன்களும் திரண்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    பல்லடம் அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களின் போராட்டம் 6-வது நாளாக நீடித்தது.

    Next Story
    ×