search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இலங்கையை 163 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காளதேசம்
    X

    முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இலங்கையை 163 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காளதேசம்

    வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேசம் அணி 163 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்று பெற்றது. #BANvSL #SLvBAN

    டாக்கா:

    வங்காளதேசத்தில் வங்காள தேசம், இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 

    இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தமிம் இக்பாலும், அனமுல் ஹக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அனமுல் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் ஷகிப் அல் ஹசன் - தமிம் இக்பாலுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய இக்பால் அரைசதம் அடித்தார். அவர் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். 

    அதன்பின் முஷ்பிகுர் ரஹிம் களமிறங்கினார். ஷகிப் அல் ஹசன் 67 ரன்களிலும், முஷ்பிகுர் 62 ரன்களிலும், அதைத்தொடர்ந்து களமிறங்கிய மஹ்மதுல்லா 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் எடுத்தது. சபிர் ரஹ்மான் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்.



    இலங்கை அணி பந்துவீச்சில் திசாரா பெரேரா 3 விக்கெட்களும், நுவான் பிரதீப் 2 விக்கெட்களும், அகிலா தனஞ்ஜெயா, அசேலா குணரத்னே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

    இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குசல் பெரேராவும், உபுல் தரங்காவும் களமிறங்கினர். பெரேரா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த வீரர்களும் வங்காளதேச அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 32.2 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 163 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணி அபாரமாக வென்றது. இது ஒருநாள் போட்டிகளில் ரன் வித்தியாசத்தில் வங்காளதேச அணியின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.



    இலங்கை அணியில் அதிகபட்சமாக திசாரா பெரேரா 29 ரன்களும், தினேஷ் சந்திமல் 28 ரன்களும், உபுல் தரங்கா 25 ரன்களும் எடுத்தனர். வங்காளதேச அணியின் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்களும், மஷ்ரபி மொர்டசா, ருபெல் ஹொசைன் தலா இரண்டு விக்கெட்களும், நசிர் ஹொசைன், முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். வங்காளதேச அணியின் ஷகிப் அல் ஹசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #BANvSL #SLvBAN
    Next Story
    ×