search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகா-ஐதராபாத் 20 ஓவர் கிரிக்கெட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய 2 ரன்
    X

    கர்நாடகா-ஐதராபாத் 20 ஓவர் கிரிக்கெட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய 2 ரன்

    கர்நாடகா-ஐதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் கர்நாடகா அணிக்கு வழங்கப்பட்ட 2 ரன்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    விசாகப்பட்டினம்:

    மாநிலங்களுக்கு இடையிலான சயத் முஷ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் தென்மண்டல பிரிவில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் கர்நாடகா-ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கர்நாடக அணி கருண் நாயர் (77 ரன்), கவுதம் (57 ரன்) ஆகியோரின் அரைசதங்களின் துணையுடன் 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது.

    இன்னிங்ஸ் முடிந்ததும் கர்நாடக கேப்டன் வினய்குமார், ‘2-வது ஓவரின் போது நாங்கள் அடித்த பந்தை எதிரணி வீரர் மெக்தி ஹசன் பீல்டிங் செய்த சமயத்தில் அவரது கால் எல்லைக்கோட்டில் தொட்டு விட்டது. அது கவனிக்கப்படாததால் 2 ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. இதை பவுண்டரியாக மாற்ற வேண்டும்’ என்று நடுவரிடம் முறையிட்டார். ரீப்ளேயில் ஆய்வு செய்த பிறகு தவறு நடந்து விட்டதை உணர்ந்த நடுவர்கள் ஐதராபாத் அணி கேப்டன் அம்பத்தி ராயுடுவிடம் சொல்லிவிட்டு கர்நாடகாவுக்கு இரண்டு ரன் கூடுதலாக வழங்கினார். இதனால் அந்த அணியின் ஸ்கோர் 205 ரன்களாக உயர்ந்தது.



    அவ்வாறு ரன்கள் வழங்கக் கூடாது என்று அம்பத்தி ராயுடு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், நடுவர்கள் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. இந்த சர்ச்சைக்கு மத்தியில் மெகா இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 203 ரன்கள் சேர்த்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஏற்கனவே அதிருப்தியில் இருந்த ஐதராபாத் அணி வீரர்கள், 2 ரன்னில் தோற்றதால் கர்நாடகாவுக்கு 2 ரன் கூடுதலாக வழங்கியது தவறு என்று நடுவரிடம் வாதிட்டனர்.



    இரு அணியின் ஸ்கோரும் சமன் ஆகியிருக்கிறது. அதனால் முடிவை அறிய சூப்பர் ஓவர் முறையை கொண்டு வர வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். ஆனால் அவர்களின் கோரிக்கையை நடுவர்கள் நிராகரித்து, கர்நாடகா அணி வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

    மற்றொரு ஆட்டத்தில் தமிழக அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் கோவாவை தோற்கடித்தது. இதில் தினேஷ் கார்த்திக்கின் அரைசதத்தின் (56 ரன்) உதவியுடன் தமிழக அணி நிர்ணயித்த 156 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கோவா அணி 130 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.
    Next Story
    ×