search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடிலெய்டு பகல் - இரவு டெஸ்ட்: இங்கிலாந்து 227 ரன்னில் சுருண்டது
    X

    அடிலெய்டு பகல் - இரவு டெஸ்ட்: இங்கிலாந்து 227 ரன்னில் சுருண்டது

    ஆஷஸ் தொடரின் அடிலெய்டு பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து 227 ரன்னில் சுருண்டது.
    ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. பகல் - இரவு டெஸ்டாக நடைபெற்று வரும் இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பீல்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 442 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. வார்னர் (47), கவாஜா (53), ஸ்மித் (40), ஷேன் மார்ஷ் (126 அவுட்இல்லை), கம்மின்ஸ் (44), பெய்ன் (57) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்திருந்தது. குக் 11 ரன்னுடனும், வின்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. குக், வின்ஸ் ஆட்டத்தை தொடங்கினர். ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வின்ஸ் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    அடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட் 9 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடிய குக் 37 ரன்கள் எடுத்த நிலையில் லயன் பந்தில் ஆட்டம் இழந்தார்.



    பின்னர் வந்த மொயீன் அலி 23, மலன் 19, பேர்ஸ்டோவ் 21, கிறிஸ் வோக்ஸ் 36, ஓவர்டன் 41 (அவுட்இல்லை) ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாட இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 227 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், நாதன் லயன் 4 விக்கெட்டும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இங்கிலாந்து 227 ரன்கள் சுருண்டதால் ஆஸ்திரேலியாவை விட முதல் இன்னிங்சில் 215 ரன்கள் பின்தங்கியிருந்தது. 200 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றாலும் ஆஸ்திரேலியா பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    பான்கிராஃப்ட், வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 4 ரன்கள் எடுத்த நிலையில் பான்கிராஃப்ட் ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து கவாஜா களம் இறங்கினார். 13 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
    Next Story
    ×