search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.18 கோடியை வங்கியில் வைத்திருக்க வேண்டும்: கிரிக்கெட் சங்கத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    X

    ரூ.18 கோடியை வங்கியில் வைத்திருக்க வேண்டும்: கிரிக்கெட் சங்கத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் குத்தகை பாக்கி தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட், ரூ.18 கோடியை வங்கியில் டெபாசிட்டாக வைத்திருக்கும்படி உத்தரவிட்டது.
    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளர் பழனி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு கடந்த 1935-ம் ஆண்டு சுமார் 15 ஏக்கர் நிலம் 30 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளது. அதன்பிறகு கடந்த 1965 மற்றும் 1995-ம் ஆண்டுகளில் குத்தகை காலம் நீட்டிக்கப்பட்டது.

    2015-ம் ஆண்டு இந்த இடத்துக்கான குத்தகையை புதுப்பிக்கக் கோரிய போது ரூ.32 லட்சம் குத்தகை பாக்கி செலுத்தப்பட்டது. ஆனால், மறுமாதமே ரூ.1,553 கோடி குத்தகைக்கான பாக்கி இருப்பதாக திருவல்லிக்கேணி - மயிலாப்பூர் வட்டாட்சியர் நோட்டீசு அனுப்பியுள்ளார். இந்த தொகை, நாங்கள் கடந்த 2000-ம் ஆண்டில் செலுத்திய தொகையை விட 20 ஆயிரத்து 713 மடங்கு அதிகமாகும். எனவே, குத்தகை பாக்கி கேட்டு அனுப்பியுள்ள நோட்டீசை சட்டவிரோதமானது என்று அறிவித்து அதை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, ‘தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.16.30 கோடியையும், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் ரூ.2.06 கோடியையும் தங்களது வங்கிக்கணக்கில் நிரந்தர வைப்பு நிதியாக டெபாசிட் செய்ய வேண்டும். இந்ததொகையை நீதிமன்ற அனுமதியின்றி எடுக்கக் கூடாது. மேலும் குத்தகை பாக்கி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்த இடைக்கால உத்தரவு தடையாக இருக்காது’ என்று உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.
    Next Story
    ×