search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா டெஸ்ட்: இலங்கை அணி முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆல் அவுட்
    X

    கொல்கத்தா டெஸ்ட்: இலங்கை அணி முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆல் அவுட்

    கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 294 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    கொல்கத்தா:

    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    முதல் இரண்டு நாள் ஆட்டங்கள் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இரண்டு நாட்களும் 32.5 ஓவர்களே வீசப்பட்டது. இதில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்தது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல்அவுட் ஆனது. புஜாரா (52), சகா (29), ஜடேஜா (22), புவனேஸ்வர் குமார் (13) மற்றும் மொகமது ஷமி (24) ரன்கள் எடுத்தனர். 

    இலங்கை அணி தரப்பில் லக்மல் நான்கு விக்கெட்டுக்களும், காமேகே, ஷனகா மற்றும் பெரேரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் சமரவிக்ரமா, கருணாரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கருணாரத்னே 8 ரன்கள் எடுத்த நிலையிலும், சமரவிக்ரமா 23 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு திரிமன்னே உடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் அடித்தனர். இதனால் இந்தியா முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை இலங்கை நெருங்கியது.

    திரிமன்னே 51 ரன்கள் எடுத்த நிலையிலும், மேத்யூஸ் 52 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தனர்.

    5-வது விக்கெட்டுக்கு டிக்வெல்லா உடன் கேப்டன் சண்டிமல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. இலங்கை அணி 45.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருக்கும்போது வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    4-வது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய சண்டிமல் 28 ரன்களிலும், டிக்வெல்லா 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஷங்கா ரன் ஏதும் எடுக்காமலும், தில்ருவான் பெரெரா 5 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். 

    இருப்பினும் சிறப்பாக விளையாடிய ரங்கனா ஹெராத் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து லக்மலும் 16 ரன்களில் சமி பந்தில் போல்டானார். இதன் மூலம் இலங்கை அணி 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 

    இந்திய அணி பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், மொகமது ஷமி ஆகியோர் தலா நான்கு விக்கெட்களும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், ஷிகர் தவானும் களமிறங்கினர். 2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 13 ரன்களுடனும், தவான் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×