search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி டிராபி: 500-வது போட்டியில் தோல்வியை நோக்கி மும்பை அணி
    X

    ரஞ்சி டிராபி: 500-வது போட்டியில் தோல்வியை நோக்கி மும்பை அணி

    முக்கியத்துவம் வாய்ந்த ரஞ்சி டிராபியின் தனது 500-வது போட்டியில் பரோடாவிற்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளது.
    ரஞ்சி டிராபியின் 5-வது லீக் ஆட்டங்கள் நேற்றுமுன்தினம் (9-ந்தேதி) தொடங்கின. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் மும்பை - பரோடா அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி மும்பைக்கு அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில்,  ரஞ்சி டிராபியில் அந்த அணிக்கு இது 500-வது போட்டியாகும்.

    சொந்த மண்ணில் பரோடா அணியை வீழ்த்தி 500-வது போட்டியில் வெற்றி என்ற சாதனையை பெற்று விடலாம் என்று மும்பை திட்டமிட்டது. ஆனால், அந்த அணியின் கணக்கு தவறாகியது. டாஸ் வென்ற பரோடா அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. பரோடாவின் அபார பந்து வீச்சால் மும்பை அணி முதல் இன்னிங்சில் 171 ரன்னிலே பரிதாபமாக சுருண்டது. தொடக்க வீரர் டரே அதிகபட்சமாக 50 ரன்கள் சேர்த்தார். இளம் வீரர் ப்ரித்வி ஷா, இந்திய துணைக் கேப்டன் ரகானே ஆகியோர் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். பரோடா அணி சார்பில் ஷேத், மேரிவாலா ஆகியோர் தலா ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தனர்.


    மும்பையை 171 ரன்னில் சுருட்ட காரணமாக இருந்த பந்து வீச்சாளர்கள்

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பரோடா அபாரன ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் வாக்மோட் சதத்தால் (138) பரோடா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 376 ரன்கள் சேர்த்திருந்தது. ஸ்வாப்னில் சிங் 63 ரன்னுடனும், கரம்பெல்கர் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஸ்வாப்னில் சிங் அபாரமாக விளையாடி 164 ரன்கள் குவித்தார். இவரது சதத்தால் பரோடா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் 404 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் பரோடா அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தியது. முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன ஷா 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். டரே 5 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 8 ரன்னிலும்,  கோஹில் டக்அவுட்டிலும் ஆட்டமிழக்க மும்பை 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்துள்ளது.


    சதம் அடித்த பரோடா வாக்மோட்

    ரகானே 28  ரன்னுடனும், சூர்யகுமார் யாதவ் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை மும்பை 302 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. மும்பை இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே 302 ரன்கள் என்ற நிலையில் கைவசம் 6 விக்கெட்டுக்கள் மட்டுமே உள்ளன. ரகானே, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நாளை முழுவதும் நிலைத்து நின்று விளையாடினால் மட்டுமே மும்பை அணியால் தோல்வியில் இருந்து தப்பிக்க முடியும்.
    Next Story
    ×