search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா - மலேசியா இன்று பலப்பரீட்சை
    X

    ஆசிய கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா - மலேசியா இன்று பலப்பரீட்சை

    பத்தவாது ஆசிய கோப்பை ஆக்கி இறுதிப்போட்டியில் இந்தியா- மலேசியா ஆகிய இரு அணிகள் இன்று மாலை மோதுகின்றன.

    டாக்கா:

    10-வது ஆசிய கோப்பை ஆக்கிப்போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டியில் இந்தியா, மலேசியா, தென்கொரியா, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறின.

    இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    நேற்று நடந்த கடைசி ‘சூப்பர் 4’ ஆட்டம் ஒன்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    சத்பீர் (39 -வது நிமிடம்) வார்மன் பிரீத் (51), உபத்யாய் (52), குர்ஜந்த் (57) ஆகியோர் கோல் அடித்தனர்.

    இந்திய அணி 2 வெற்றி, 1 டிரா மூலம் 7 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. தென்கொரியா- மலேசியா அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. இதன்மூலம் மலேசியா 4 புள்ளிகள் பெற்று 2-வது இடத்துக்கு முன்னேறி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா- மலேசியா அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி மலேசியாவை வீழ்த்தி 3-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 2003, 2007-ல் பட்டம் வென்று இருந்தது.

    இந்திய ஆக்கி அணி இந்தப்போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காமல் சிறப்பாக ஆடி வருகிறது. மலேசியாவை ‘சூப்பர் 4’ சுற்றில் 6-2 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

    முன்னதாக மாலை 3 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான்- தென் கொரியா மோதுகின்றன.

    Next Story
    ×