search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    U-17 உலகக்கோப்பை கால்பந்து: நாக்-அவுட் போட்டிகளில் கானா, பிரேசில் அணிகள் வெற்றி
    X

    U-17 உலகக்கோப்பை கால்பந்து: நாக்-அவுட் போட்டிகளில் கானா, பிரேசில் அணிகள் வெற்றி

    17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்று போட்டிகளில் கானா மற்றும் பிரேசில் அணிகள் வெற்றி பெற்றன.

    புதுடெல்லி: 

    இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 6-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 14-ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் கடந்த திங்கள்கிழமை (16-ம் தேதி) தொடங்கியது. நேற்று (18-ம் தேதி) இரண்டு போட்டிகள் நடைபெற்றது.

    நவிமும்பையில் 5 மணிக்கு தொடங்கிய நாக்-அவுட் போட்டியில் கானா, நைஜர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் கானா அணியின் அயியா கோல் அடித்தார். இதனால் கானா அணி முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடந்த இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்க முயற்சித்தனர். இறுதியில் 90-வது நிமிடம் கானா அணியின் டான்சோ கோல் அடித்தார். நைஜர் அணியினர் இறுதிவரை எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் கானா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.



    கொச்சியில் 8 மணிக்கு தொடங்கிய மற்றொரு நாக்-அவுட் போட்டியில் பிரேசில் - ஹாண்டுரஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. பிரேசில் அணியில் பிரென்னர் 11-வது மற்றும் 56-வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தார். ஆண்டான்யோ 44-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்காக கோல் அடித்தார். இதன்மூலம் பிரேசில் அணியும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    அடுத்த கட்டமாக 21-ம் தேதி காலிறுதி சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. 21-ம் தேதி நடைபெறும் காலிறுதி போட்டிகளில் மாலி - கானா, இங்கிலாந்து - அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. 22-ம் தேதி நடைபெறும் காலிறுதி போட்டிகளில் ஜெர்மனி - பிரேசில், ஸ்பெயின் - ஈரான் அணிகள் மோதுகின்றன.
    Next Story
    ×