search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸி.க்கு 253 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா
    X

    2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸி.க்கு 253 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

    கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிடில் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா 252 ரன்கள் சேர்த்துள்ளது.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

    கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், இன்று மழை போட்டிக்கு வழிவிட்டதால் ஆட்டம் சரியாக 1.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் பால்க்னெர், ஆடம் ஜம்பா நீக்கப்பட்டு கேன் ரிச்சர்ட்சன், ஆஷ்டோன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    ரகானே, ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்திய அணியின் ஸ்கோர் 5.1 ஓவரில் 19 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 14 பந்தில் 1 பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா, கவுல்டர்-நைல் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார்.

    ரகானே - விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரின் ஆட்டத்தால் 11-வது ஓவரில் இந்தியா 50 ரன்னும், 19.5 ஒவரில் 100 ரன்னையும் தொட்டது.



    விராட் கோலி 60 பந்தில் அரைசதமும், ரகானே 62 பந்தில் அரைசதமும் அடித்தனர். இதன்பின் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ரகானே துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.

    இந்தியாவின் ஸ்கோர் 23.4 ஓவரில் 121 ரன்னாக இருக்கும்போது ரகானே 55 ரன்னில் ரன்அவுட் அனார். அதன்பின் வந்த வீரர்கள் மணீஷ் பாண்டே 3 ரன்னிலும், கேதர் ஜாதவ் 5 ரன்னிலும் ஆட்டம் இழந்ததால் இந்தியாவின் ஸ்கோர் குறைய ஆரம்பித்தது.

    விராட் கோலி சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில் 92 ரன்னில் வெளியேறினார். அதன்பின் வந்த டோனி 5 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

    ஹர்திக் பாண்டியா 38-வது ஓவரின் கடைசி பந்தில் இருந்தே களம் இறங்கினாலும் அவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை. 48-வது ஓவரின் 4-வது பந்தை ரிச்சர்ட்சன் நோ-பால் ஆக வீசினார். அப்போது திடீரென மழை பெய்தது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

    பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அந்த ஓவரின் கடைசி பந்தில் புவனேஸ்வர் குமார் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 49-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் குல்தீப் யாதவ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.



    கடைசி ஓவரில் இந்தியா 2 விக்கெட்டுக்கள் இழக்க, சரியாக 50 ஓவரில் இந்தியா 252 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கவுல்டர்-நைல், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    ஆஸ்திரேலியாவின் நேர்த்தியான பந்து வீச்சை சமாளித்து ஆடிய இந்தியா, ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 253 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
    Next Story
    ×