search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டேவிஸ் கோப்பை பிளே ஆஃப்: இந்தியா 2-3 என தோல்வியடைந்து ஏமாற்றம்
    X

    டேவிஸ் கோப்பை பிளே ஆஃப்: இந்தியா 2-3 என தோல்வியடைந்து ஏமாற்றம்

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் பிளே ஆஃப் சுற்றில் இந்தியா 2-3 என கனடாவிடம் தோல்வியடைந்து உலக குரூப் வாய்ப்பை இழந்தது.
    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக சுற்றுக்கான ‘பிளே-ஆப்’ ஆட்டத்தில் இந்தியா- கனடா அணிகள் மோதின. இந்த ஆட்டம் கனடாவில் உள்ள எட்மண்டன் நகரில் நடைபெற்றது.

    ஒற்றையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 154-வது இடத்தில் இருக்கும் 22 வயதான ராம்குமார் ராமநாதன், 202-ம் நிலை வீரரான கனடாவின் பிரெய்டன் ஸ்னூரை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னையை சேர்ந்த ராம்குமார் 5-7, 7(7)- 6(4), 7-5, 7-5 என்ற செட் கணக்கில் பிரெய்டன் ஸ்னூரை வீழ்த்தி இந்திய அணிக்கு 1-0 என்ற கணக்கில் முன்னிலை கொடுத்தார்.



    2-வது ஒற்றையர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 157-வது இடத்தில் உள்ள யுகி பாம்ப்ரி, 51-ம் நிலை வீரரான கனடாவின் டெனிஸ் ஷபோவாலோவுடன் மோதினார். முதல் 2 செட்களையும் இழந்த யுகி பாம்ப்ரி, பின்னர் சுதாரித்து ஆடி அடுத்த 2 செட்களையும் கைப்பற்றினார். இதனால் ஆட்டம் 5-வது செட் வரை நீடித்தது.

    கடைசி செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஷபோவாலோவ் வெற்றி பெற்றார். முடிவில் யுகி பாம்ப்ரி 6-7 (2-7), 4-6, 7-6 (8-6), 6-4, 1-6 என்ற செட் கணக்கில் ஷபோவாலோவ்விடம் தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் 3 மணி 52 நிமிடம் நீடித்தது. பாம்ப்ரி தோல்வியால் இரு அணிகளும் 1-1 என சமநிலைப் பெற்றது.



    3-வது போட்டியான இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா - புரவ் ராஜா ஜோடி கனடாவின் டேனியல் நெஸ்டர் - வெசெக் போஸ்பிசில் ஜோடியை எதிர்கொண்டதது, இதில் போபண்ணா ஜோடி 5-7, 5-7, 7-5, 3-6 என தோல்வியடைந்தது. இதனால் கனடா 2-1 என முன்னிலைப் பெற்றது.



    மாற்று ஒற்றையர் பிரிவில் ராம்குமார் ராமநாதன் டெனிஸ் ஷபோவாலோவை எதிர்கொண்டார். இதில் ராம்குமார் 3-6, 6(1)-7(7), 3-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். ஆகவே கனடா 3-1 என வெற்றி பெற்றது.


    கடைசி சுற்றில் பிரெய்டன் ஸ்னூரை யுகி பாம்ப்ரி 6-4, 4-6, 6-4 என வீழ்த்தினார். இதனால் இந்தியா 2-3 என தொடரை முடித்து பிளே-ஆஃப் சுற்றோடு திருப்தியடைந்தது.

    இந்தியா இதுவரை பிளே-ஆஃப் சுற்றைத் தாண்டியது கிடையாது. செர்பியா, செக் குடியரசு மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு எதிராக தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×