search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    500 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் சாதனை
    X

    500 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் சாதனை

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கடைசி டெஸ்டில் பிராத்வெயிட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்கள் எடுத்த 6-வது வீரர் என்ற பெருமையை ஆண்டர்சன் பெற்றார்.
    லண்டன்:

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 123 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 46 ரன்களுடன் திணறிக்கொண்டிருந்தது.

    இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 52.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் 60 ரன்களும், ஸ்டூவர்ட் பிராட் 38 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் கெமார் ரோச் 5 விக்கெட்டுகளும், ஜாசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    அடுத்து 71 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் கிரேக் பிராத்வெயிட்டை (4 ரன்), இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிளன் போல்டு ஆக்கினார். இது டெஸ்டில் அவரது 500-வது விக்கெட் (129 டெஸ்ட்) ஆகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட் மைல்கல்லை கடந்த 6-வது வீரர், முதல் இங்கிலாந்து வீரர் ஆகிய சிறப்புகளை 35 வயதான ஆண்டர்சன் பெற்றார். இதே மைதானத்தில் தான் 2003-ம் ஆண்டு ஆண்டர்சன் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    இந்த சாதனை பட்டியலில் முதல் 5 இடங்களில் இலங்கையின் முரளிதரன் (800 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே (708 விக்கெட்), இந்தியாவின் அனில் கும்பிளே (619 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் கிளைன் மெக்ராத் (563 விக்கெட்), வெஸ்ட் இண்டீசின் கார்ட்னி வால்ஷ் (519 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.
    Next Story
    ×