search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துருக்கி டென்னிஸ்: உலகின் 8-ம் நிலை வீரரை வீழ்த்தி ராம்குமார் சாதனை
    X

    துருக்கி டென்னிஸ்: உலகின் 8-ம் நிலை வீரரை வீழ்த்தி ராம்குமார் சாதனை

    துருக்கி டென்னிஸ் போட்டியில், உலகின் 8-ம் நிலை வீரரான டொமினிக் தியமை 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி ராம்குமார் சாதனை படைத்தார்.
    சென்னை:

    சென்னையை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவர் ராம்குமார் ராமநாதன். 22 வயதான இவர் உலக தரவரிசைப் பட்டியலில் 222-வது இடத்தில் உள்ளார்.

    ராம்குமார் ராமநாதன் துருக்கியில் நடைபெற்று வரும் ஆன்ட்லியா ஓபன் டென்னிஸ் போட்டியில் தற்போது பங்கேற்று வருகிறார். தகுதி சுற்று போட்டி மூலம் அவர் நுழைந்தார். தொடக்க சுற்றில் அவர் பிரேசில் வீரர் சில்வாவை 6-3, 6-4 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

    நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் அவர் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரியாவை சேர்ந்த டொமினிக் தியமை எதிர்கொண்டார்.

    இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்று டொமினிக் தியமுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவர் 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

    உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள வீரரை அவர் முதல் முறையாக வீழ்த்தி சாதனை புரிந்தார். இந்த வெற்றியை பெற ராம்குமாருக்கு 59 நிமிட நேரம் தான் தேவைப்பட்டது.



    1998-ம் ஆண்டு நியூஹெவன் டென்னிஸ் போட்டியில் லியாண்டர் பெயஸ் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த பீட்சாம்ராசை தோற்கடித்து இருந்தார்.

    அதன்பிறகு இந்திய வீரர் ஒருவர் பெற்ற மிகச்சிறந்த சாதனை வெற்றி ராம்குமார் பெற்றதாகும்.

    சரித்திரம் படைத்த சென்னை வீரர் ராம்குமார் இதுபற்றி கூறும்போது, இது ஒரு சிறந்த ஆட்டம் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும். முதல் சுற்றில் 68-ம் நிலை வீரரை தோற்கடித்தேன். இந்த ஆட்டம் டொமினிக் தியமை வீழ்த்த உதவியாக இருந்தது என்றார்.

    ராம்குமார் இதற்கு முன்பு இந்திய வீரர்கள் சோம்தேவ் தேவ்வர்மா, யூகிபாம்ரி ஆகியோரை வீழ்த்தியதே சிறந்ததாக இருந்தது.

    உலகின் 8-ம் நிலை வீரரை வீழ்த்திய ராம்குமாருக்கு ரோகன் போபண்ணா, மகேஷ்பூபதி ஆகியோர் டுவிட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    ராம்குமார் கால் இறுதியில் சைபிரஸ் வீரர் மார்கஸ் பாகாடிஸ்சை எதிர்கொள்கிறார். அவர் தரவரிசையில் 50-வது இடத்தில் உள்ளார்.
    Next Story
    ×