search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிர்ச்சிமேல் அதிர்ச்சி அளித்த பாகிஸ்தானை புறந்தள்ளி விட முடியாது: ஹசி எச்சரிக்கை
    X

    அதிர்ச்சிமேல் அதிர்ச்சி அளித்த பாகிஸ்தானை புறந்தள்ளி விட முடியாது: ஹசி எச்சரிக்கை

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்த பாகிஸ்தானை புறந்தள்ளி விட முடியாது என்று மைக் ஹசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த 15-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா வங்காள தேசத்தை வீழ்த்தியதும், அனைத்து விளையாட்டுப் பத்திரிகைகளிலும், நாளை இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி குறித்துதான் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

    இதற்கு தோதாக அனைத்து முன்னணி வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனடிப்படையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள வீரர் மைக் ஹசியும் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    அதில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள பாகிஸ்தான் அணியை புறந்தள்ளி விட முடியாது, என்று தெரிவித்துள்ளார்.

    நாளை நடைபெற இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து ஹசி கூறுகையில் ‘‘தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் எந்தவித போராட்டமும் இன்றி தோல்வியடைந்த பாகிஸ்தான், அதன்பின் எழுச்சிப் பெற்று அனைத்து அணிகளுக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    ஒவ்வொரு போட்டியும் அவர்களுக்கு நாக்அவுட் போட்டியாக இருந்துள்ளது. சூழ்நிலையை ஒவ்வொரு வீரர்களும் நன்கு உணர்ந்து அவர்களது திறமைகளை சுதந்திரமாக வெளிப்படுத்தி தோல்வியை சந்திக்காமல் வந்துள்ளனர்.

    ஐ.சி.சி. தொடர்களில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணி பெரிய அளவில் சாதித்தது கிடையாது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டு முறை மட்டுமே இந்தியாவை வென்றுள்ளது. 2004-ல் சவுதாம்ப்டனிலும், 2009-ல் செஞ்சூரியனிலும் வீழ்த்தியுள்ளது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இரு அணிகளும் நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்துகிறது. கடந்த போட்டிகளில் பெற்ற வெற்றிகள் மூலம் பாகிஸ்தான் கூடுதலாக உத்வேகத்துடன் களமிறங்கும் என்பது உறுதி.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்ற இந்தியாவிற்கு அதிக வாய்ப்பள்ளது. இருந்தாலும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்து வரும் பாகிஸ்தான் அணியையும் புறந்தள்ளி விட முடியாது’’ என்றார்.
    Next Story
    ×