search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பான அறிக்கையை அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
    X

    நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பான அறிக்கையை அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    சொராபுதின் ஷேக் போலி என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்துவந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பான அறிக்கையை மனுதாரர்களுக்கு அளிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் சொராபுதின் ஷேக் உள்பட 3 பேர் போலி என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டதாக, தற்போதைய பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை, மும்பை சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பி.எச்.லோயா, கடந்த 1-12-2014 மராட்டிய மாநிலம் நாக்பூரில் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது, மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    அவரது மரணத்துக்கும், சொராபுதின் வழக்குக்கும் தொடர்பு இருக்கலாம் என்று அவருடைய சகோதரி இருமாதங்களுக்கு முன்பு சந்தேகம் எழுப்பி இருந்தார். சொராபுதின் ஷேக் என்கவுண்ட்டர் வழக்கில் இருந்து அமித் ஷாவை விடுவிக்க மேலிடத்தில் இருந்து நிர்பந்திக்கப்படுவதாக உயிருடன் இருந்தபோது லோயா கூறியதாக அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.

    இதற்கு கைபதிலாக மும்பை நகரின் மையப்பகுதியில் பல ஏக்கர்கள் பரப்பளவு கொண்ட வீட்டுமனையை பெற்று தருவதாக மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதி தன்னிடம் பேரம் பேசியதாகவும் தெரிவித்த லோயா, மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாகவும், என்ன நடந்தாலும் சரி. சொராபுதின் ஷேக் என்கவுண்ட்டர் வழக்கில் முறையான நீதி அளிக்கப்பட வேண்டும் என அவர் உறுதி கொண்டிருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    மேலும், லோயாவின் உயிர் பிரிவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னரே அவர் இறந்து விட்டதாக வந்த கைபேசி தகவலும் இந்த மரணத்தில் சந்தேகத்தை எழுப்புவதாக அவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.


    இந்த நிலையில், நீதிபதி லோயா மரணம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, காங்கிரஸ் பிரமுகர் தெசீன் பூனவாலா, பத்திரிகையாளர் பி.ஆர்.லோன் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னர் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

    ‘நீதிபதி பி.எச்.லோயா மர்ம மரணம் மிகவும் முக்கியமான விவகாரமாகும். இருதரப்பு விசாரணையும் மிகவும் முக்கியமானது. இவ்விவகாரத்தில் மராட்டிய மாநில அரசு சார்பில் ஜனவரி 15-ம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து,  நீதிபதி லோயா மரணம் தொடர்பாக தங்களிடம் இருந்த தகவல்களை மகாராஷ்டிர மாநில அரசு கோர்ட்டில் சீலிட்ட உறையில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் விபரங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என இவ்வழக்கை தொடர்ந்த மனுதாரர்கள் இன்று கேட்டனர்.

    மகாராஷ்டிர மாநில அரசின் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மாநில அரசின் ரகசிய குறிப்புகளை மனுதாரர்களான பத்திரிகையாளர், அரசியல்வாதி ஆகியோரிடம் அளிக்க கூடாது என வாதாடினார். தேவை ஏற்பட்டால் அவர்களின் சார்பில் இவ்வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் இந்த ஆவணங்களை பார்வையிடலாம். அவற்றில் உள்ள ரகசியங்களை அவர்கள் யாருக்கும் வெளிப்படுத்த கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

    இவ்வழக்கு தொடர்பாக நாங்கள் மேற்கொண்டு வாதாடுவதற்கு தேவைப்படுவதால் நீதிபதி லோயாவின் மரணம் தொடர்பான இந்த அறிக்கையில் உள்ள விபரங்களை எங்களுக்கு அளிக்க வேண்டும் என மனுதாரர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடினர். இதை ஏற்றுகொண்ட நீதிபதிகள் அருண் மிஷ்ரா, ஷாந்தனாகவுடர் ஆகியோரை கொண்ட அமர்வு, லோயா மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒருவாரத்துக்குள் மனுதாரர்களுக்கு அளிக்குமாறு மகாராஷ்டிர மாநில அரசுக்கு உத்தரவிட்டது. #TamilNews
    Next Story
    ×