search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கிய தமிழர் உட்பட 5 ராணுவ வீரர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரம்
    X

    காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கிய தமிழர் உட்பட 5 ராணுவ வீரர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரம்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கிய தமிழக வீரர் உட்பட 5 ராணுவ வீரர்கள் 2 நாட்கள் ஆகியும் கிடைக்காததால் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    கரூர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மற்றும் பாந்திபோரா மாவட்டங்களில் ஏற்பட்ட பனிச்சரிவில் 5 ராணுவ வீரர்கள் சிக்கினர்.
           
    பாந்திபோரா மாவட்டம் பாக்தோர் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் எல்லை கோட்டுப்பகுதியில் உள்ள ராணுவ முகாம் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த 3 ராணுவ வீரர்கள் பனியில் சிக்கினர். குப்வாரா மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ராணுவ வீரர்கள் மலையிலிருந்து தவறி விழுந்தனர்.



    அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் காணாமல் போய் இரண்டு நாள்கள் ஆகியும் அவர்களை பற்றிய தகவல் இன்னும் தெரியவில்லை. அவர்கள் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

    மூன்றாம் நாளான இன்று தேடும் பணியில் பல மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கர்னல் ராஜேஸ் காளியா தெரிவித்தார். தொடர்ச்சியாக கடுமையான பனிபொழிவு இருந்த போதிலும் வீரர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நேற்று மாலை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி நடைபெற்றது. ஆனால் மோசமான வானிலையால் ஹெலிகாப்டரால் குறிப்பிட்ட தூரத்திற்கு கீழ் அதனை இறக்க முடியவில்லை. ஓரளவு பனிப்பொழிவு கட்டுக்குள் வந்தால் ஹெலிகாப்டர் மூலம் சென்று ராணுவ வீரர்கள் அந்த கயிறு மூலம் இறக்கி தேடும் பணி நடத்தப்படும் என்று முகாம் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கிய 5 பேரில் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கொசூர் பக்கம் களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (வயது 33) எனவும் தெரியவந்துள்ளது.

    மூர்த்தியின் மனைவி தமிழரசி (31). இவரது செல்போன் எண்ணிற்கு நேற்று காஷ்மீர் ராணுவ முகாமில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்தியில் பேசியதால் தமிழ் மொழியில் பேசுமாறு அவர் கூறினார். சிறிது நேர தாமதத்திற்கு பிறகு ராணுவ முகாமில் இருந்து செல்போன் அழைப்பு மீண்டும் வந்தது.



    அப்போது மறுமுனையில் தமிழில் பேசியவர், மூர்த்தி பணியில் ஈடுபட்டிருந்த போது பனிச்சரிவில் சிக்கிக்கொண்டார். அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அவருடன் மேலும் 4 பேர் சிக்கியிருக்கின்றனர். 5 பேரையும் மீட்க பணிகள் நடந்து வருகிறது என்று கூறியிருக்கிறார்.

    இந்த தகவலை கேட்ட தமிழரசி அதிர்ச்சியடைந்தார். கணவரின் நிலை என்ன ஆனது என்று தெரியாததால் கதறி அழுதார். மேலும் தனது உறவினர்களுக்கும் அவர் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் அவரது வீட்டிற்கு உறவினர்கள் திரண்டு வந்தனர். மூர்த்தியின் தந்தை நாச்சி, தாய் வெள்ளையம்மாள் ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர். அவரது வீட்டின் முன்பு உறவினர்களும், அதேபகுதியை சேர்ந்த பொதுமக்களும் சோகத்துடன் திரண்டு நின்றனர்.
     
    இதற்கிடையே வருவாய்த்துறை அதிகாரிகள் மூர்த்தியின் வீட்டிற்கு வந்து அவர் குறித்த விவரங்களை தமிழரசி மற்றும் அவரது உறவினர்களிடம் பெற்றுச்சென்றனர். ராணுவ வீரர் மூர்த்தி பனிச்சரிவில் சிக்கியதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. மேலும் மூர்த்தியின் குடும்பத்தாருக்கு அவ்வப்போது நிலைமையை எடுத்துக்கூறும் வகையில் தமிழ் பேச தெரிந்த ராணுவ வீரர் ஒருவர் காஷ்மீர் எல்லையில் பணியமர்த்தப்பட்டு உள்ளார்.
    Next Story
    ×