search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்மாவதி படத்தை திரையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்து தருவோம்: மம்தா பானர்ஜி அதிரடி
    X

    பத்மாவதி படத்தை திரையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்து தருவோம்: மம்தா பானர்ஜி அதிரடி

    நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ள பத்மாவதி படத்தை மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்து தருவோம் என அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி, இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும்வரை பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகள் முன்னர் அறிவித்திருந்தன.

    இந்நிலையில், ரஜபுத்திரர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் என்பதால் பத்மாவதி படத்தை குஜராத்தில் திரையிட அனுமதிக்க முடியாது என அம்மாநில முதல்-மந்திரி விஜய் ருபானியும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், இப்படத்தில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும். அதுவரை பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று அகன்ற ராஷிரிராவதி கட்சி சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை (விடுமுறைக் கால) தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான இருநபர் அமர்வு இன்று தள்ளுபடி செய்துள்ளது.  

    இந்நிலையில், பத்மாவதி படத்தை மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்து தருவோம் என அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.


    பத்மாவதி படத்துக்கு பெருகிவரும் எதிர்ப்பு தொடர்பாக முன்னர் கருத்து தெரிவித்திருந்த மம்தா பானர்ஜி, இந்த படத்துக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பு துரதிர்ஷ்டவசமானது மட்டுமன்றி, உணர்வு சுதந்திரத்தை அழிக்கும் ஒரு கட்சியின் ஒட்டுமொத்த சதி. இந்த அவசரநிலை ஒடுக்குமுறையை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இதை எதிர்த்து ஒட்டுமொத்த திரையுலகமும் ஒன்றாக குரல் எழுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், கொல்கத்தா நகரில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மம்தா பானர்ஜி, பத்மாவதி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரால் அந்த படத்தை நாட்டின் எந்தவொரு மாநிலத்திலும் திரையிட முடியவில்லை என்றால் மேற்கு வங்காளத்தில் திரையிட தேவையான சிறப்பு ஏற்பாடுகளை செய்துதர நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இதற்காக நாங்கள் பெருமை கொள்வதுடன் மகிழ்ச்சியும் அடைகிறோம். எங்கள் மாநிலத்துக்கு வந்தால் பத்மாவதி குழுவினரை வரவேற்போம் என்று இன்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×