search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தர பிரதேசத்தில் ரெயில் கவிழ்ந்து 3 பேர் பலி: 13 பெட்டிகள் தடம் புரண்டது
    X

    உத்தர பிரதேசத்தில் ரெயில் கவிழ்ந்து 3 பேர் பலி: 13 பெட்டிகள் தடம் புரண்டது

    உத்திர பிரதேசத்தில் வாஸ் கோட காமா-பட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 3 பயணிகள் பலியானார்கள். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
    புதுடெல்லி:

    கோவா தலைநகர் பனாஜியில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவுக்கு ‘வாஸ் கோட காமா-பட்னா’ எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு புறப்பட்டது.

    இன்று அதிகாலை 4.18 மணிக்கு இந்த ரெயில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாணிக்பூர் ரெயில் நிலையத்தில் நின்று புறப்பட்டது.

    ரெயில் வேகமாக செல்ல முயன்றபோது திடீரென்று ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு விலகி ஓடியது. ரெயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. மொத்தம் 13 பெட்டிகள் தடம் புரண்டன.



    இந்த விபத்தில் 3 பயணிகள் பலியானார்கள். 9 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் ரெயில்வே அதிகாரிகளும் மீட்பு படையினரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். காயம் அடைந்தவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    விபத்து பற்றி அறிந்ததும் ரெயில் மந்திரி பியூஷ் கோயல் மீட்பு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



    பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், உதவித்தொகை வழங்க மந்திரி பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விபத்து நடந்த சித்ரகூட் மாவட்டத்தில் 12 மணி நேரத்துக்கு முன்பு தான் தண்டவாளத்தை கடந்த ஜீப் மீது பயணிகள் ரெயில் மோதியதில் 4 பேர் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர்.
    Next Story
    ×