search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுலை காங்கிரஸ் தலைவராக்க நாளைய கூட்டத்தில் முடிவு
    X

    ராகுலை காங்கிரஸ் தலைவராக்க நாளைய கூட்டத்தில் முடிவு

    ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்வது சம்பந்தமாக நாளை நடைபெறும் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்க இருக்கின்றனர்.
    புதுடெல்லி:

    காங்கிரசின் உயர்மட்ட அமைப்பான காரிய கமிட்டி கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. கட்சியின் முக்கிய முடிவுகளை காரிய கமிட்டி கூடிதான் ஆலோசிப்பது வழக்கம்.

    எனவே, முக்கிய விவகாரங்கள் தொடர்பாக நாளை பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.

    காங்கிரஸ் தலைவராக உள்ள சோனியா காந்தி உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியல் பணியில் இருந்து சற்று விலகி இருக்கிறார். துணை தலைவர் ராகுல்காந்திதான் கட்சியின் அனைத்து பணிகளையும் கவனித்து வருகிறார்.

    எனவே, ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் பலரும் வற்புறுத்தி வந்தனர். ஆனாலும், அவரை தலைவர் ஆக்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

    இப்போது அவரை தலைவராக தேர்வு செய்ய தகுந்த நேரம் வந்திருப்பதாக கருதுகின்றனர். இது சம்பந்தமாக நாளை நடைபெறும் காரிய கமிட்டி கூட்டத்தில் ஆலோசனை நடத்தி அவரை தேர்வு செய்வது சம்பந்தமாக முடிவு எடுக்கின்றனர்.

    தற்போது காங்கிரசில் மாநில அளவில் நிர்வாகிகள் தேர்வு நடந்து வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் தேர்வு முடிந்துவிட்டது. நிர்வாகிகள் பட்டியலை மட்டும் இன்னும் வெளியிடவில்லை.

    இதன் இறுதி கட்டமாக அகில இந்திய தலைவரை தேர்வு செய்ய வேண்டும். அகில இந்திய தலைவர் தேர்தலை எப்போது நடத்துவது? என்பது பற்றி காங்கிரஸ் கட்சி சட்ட விதிகள்படி காரிய கமிட்டிதான் முடிவு செய்ய வேண்டும்.

    இதற்காகத்தான் நாளை கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் ராகுல்காந்தியை தலைவராக தேர்வு செய்வது என்று முடிவு எடுப்பதுடன் அதற்கான தேர்தல் தேதியையும் முடிவு செய்கிறார்கள்.

    அகில இந்திய தலைவர் தேர்தலுக்கு முறைப்படி விண்ணப்பித்து அதன்படி தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ராகுல்காந்தி தவிர வேறு யாரும் விண்ணப்பிக்காமல் ஏகமனதாக தேர்வு செய்யவும் முடிவு செய்ய உள்ளனர்.

    குஜராத் தேர்தல் முடிந்ததும் டிசம்பர் தொடக்கத்திலேயே தேர்தல் நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். இதில், முறைப்படி ராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார். ராகுல் காந்தி தலைவரானால் நேரு பரம்பரையில் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர்களில் 6-வது நபராக இருப்பார்.

    நேரு குடும்பத்தில் முதலில் நேருவின் தந்தை மோதிலால் நேரு 2 தடவை காங்கிரஸ் தலைவராக இருந்தார். அதன் பிறகு நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, சோனியா காந்தி தலைவராக இருந்துள்ளனர்.

    சோனியா காந்தி காங்கிரசில் 19 ஆண்டுகளாக தலைவராக இருந்து வருகிறார். காங்கிரசில் நீண்ட காலம் தொடர்ந்து தலைவராக இருந்தவர் என்ற பெருமையை சோனியா பெற்றுள்ளார்.

    ராகுல்காந்தி 2013-ம் ஆண்டு துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இப்போது அகில இந்திய தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
    Next Story
    ×