search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரகாண்ட்: கிராமத்திலுள்ள அனைவருக்கும் பிறந்தநாள் ஜனவரி 1 - ஆதார் கார்டு சொல்கிறது
    X

    உத்தரகாண்ட்: கிராமத்திலுள்ள அனைவருக்கும் பிறந்தநாள் ஜனவரி 1 - ஆதார் கார்டு சொல்கிறது

    உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஒரு கிராமத்தில் அனைவரது பிறந்தநாளும் ஜனவரி 1 என அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆதார் கார்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    டேராடூன்:

    அரசின் நலத்திட்டங்களின் பயன்களை பெறுவதற்காக ஆதார் கார்டை மத்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது. வங்கி கணக்கு, ரேஷன் கார்டு, பான் கார்டு, தொலைபேசி எண் போன்றவை ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், உத்தரகாண்ட்மாநிலம் ஹரித்வாரில் உள்ள கைந்திகட்டா கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் அனைவருக்கும் ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்றது. பின்னர் இங்குள்ள சுமார் 800 குடும்பங்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது.



    ஆதார் கார்டில் பெயர், முகவரி போன்ற விவரங்கள் சரியாக இருந்தன. ஆனால் பிறந்தநாள் மட்டும்  ‘ஜனவரி 1’ என அச்சிடப்பட்டுள்ளது.  ஒன்றிரண்டு நபர்களுக்கு மட்டும் இல்லை. கிராமத்தில் உள்ள அனைவரது ஆதார் கார்டிலும் பிறந்த நாள் ஜனவரி 1 என்றே அச்சிடப்பட்டு இருந்தது. இதனால் அந்த கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுதொடர்பாக கிராமத்தினர் கூறுகையில், எங்கள் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு வழங்கப்பட்டு விட்டது. ஆனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது பிறந்த நாளும் ஜனவரி 1 என அச்சிடப்பட்டுள்ளது. நாங்கள் எங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வழங்கியுள்ளோம். இப்படி தப்பும் தவறுமாக ஆதார் கார்டு வழங்கியதால் எந்த பயனும் இல்லை என வேதனையுடன் கூறியுள்ளனர்.


     
    ஏற்கனவே, ஆதார் கார்டில் பயனாளரின் புகைப்படத்துக்கு பதிலாக பிள்ளையார் படம், ஆண்களுக்கு பதில் பெண்களின் படங்கள் என பல்வேறு குளறுபடிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×