search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குருகிராம் பள்ளி சிறுவன் கொலை: செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்
    X

    குருகிராம் பள்ளி சிறுவன் கொலை: செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

    குருகிராமில் பள்ளி சிறுவன் கொலை சம்பவம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள குருகிராமில் தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது மாணவன் ஒருவன், பள்ளி கழிவறையில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். விசாரணையில், அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த பள்ளி பேருந்தின் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார். 

    இதற்கிடையில், மாணவன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை செய்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்குமாறு பள்ளி முன்பு சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்கும் முயற்சியில் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், செய்தியாளர்கள் என அனைவரின் மீதும் போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்த தடியடி சம்பவத்தில் பலரும் காயமடைந்தனர். இதில் ஒரு செய்தியாளர் பலத்த காயமடைந்தார். மேலும் அந்த செய்தி நிறுவனத்தின் வாகன கண்ணாடிகளையும் போலீசார் அடித்து நொறுக்கினர்.

    செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சி தலைவரும், அரியானா மாநிலத்தில் முன்னாள் முதல்வருமான பி.எஸ்.ஹூடா கூறுகையில், "ஊடகங்கள் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாகும், மேலும் மக்களுடைய கவலைகளை வெளிக்கொண்டுவரும் கருவியாகும், அதை இவ்வாறு அடக்கக் கூடாது. ஊடகம் மீதான தாக்குதல் கண்டத்திற்குரியது. ஒரு ஜனநாயகத்தில் அரசாங்கம் லத்தியுடனும், துப்பாக்கி குண்டுடனும் பணியாற்றாது", என கூறினார்.

    இந்திய கன்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பேசுகையில், "ஊடகத்தினரை தாக்கிய பெருமை அரியானா போலீசுக்கு கிடைத்துள்ளது, தேரா கலவரத்தின் போதும் இதே போலதான் நடந்தது", என குறிப்பிட்டுள்ளார்.



    அரியானா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான சுர்ஜேவாலா, "செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு முதல்வர் கத்தார் மன்னிப்பு கேட்க வேண்டும். தாக்குதல் நடத்திய போலீசார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்", என கோரிக்கை விடுத்துள்ளார்.  


    Next Story
    ×