search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரமத்தில் ஆயுதங்களை குவித்து பாதுகாப்பு படையினரை தாக்கிய சாமியார் ராம்பால் விடுவிப்பு
    X

    ஆசிரமத்தில் ஆயுதங்களை குவித்து பாதுகாப்பு படையினரை தாக்கிய சாமியார் ராம்பால் விடுவிப்பு

    அரியானா மாநிலத்தில் ஆசிரமம் அமைத்து தன்னை கைது செய்யவந்த போலீசாரை துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கிய சர்ச்சை சாமியார் ராம்பால் இரு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தின் பர்வாலா என்ற இடத்தில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ராம்பால், 11 ஆண்டுகளுக்கு முன்னர் கொலை வழக்கில் சிக்கிய அவர் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இதனையடுத்து, அடுத்த கட்ட
    விசாரணைகளுக்கு ஆஜர் ஆகாததால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கலானது.

    இதன் பின்னரும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் 2014-ம் ஆண்டில் ராம்பால்-க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால், அவரை கைது செய்ய போலீசார் அவரது ஆசிரமத்திற்கு விரைந்தனர். அப்போது, ஆசிரமத்தில்
    இருந்த அவரது ஆதரவாளர்கள் போலீசாரை உள்ளே விடாமல் அரண் போல் தடுத்து நின்றனர்.

    மேலும், ஆசிரமத்தின் உள்ளே இருந்து ஆயுதங்கள் மூலம் போலீசாரை தாக்கினர். இதனால், ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த மோதலில் 8 பேர் வரை பலியாகினர். இதனையடுத்து, ஆசிரமத்தில் இருந்த 15 ஆயிரம் பேரை வெளியேற்றிய பின்னர், ராம்பால் உள்ளிட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர் மீதான வழக்கின் விசாரணை ஹிஸார் தனிநீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. 7 பிரிவுகளில் வழக்குகள் அவர் மீது பதியப்பட்டிருந்த நிலையில் 426, 427 என இரு பிரிவு வழக்குகளில் அவரை விடுவித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

    இருப்பினும், மேலும், ஐந்து வழக்குகளில் தீர்ப்பு அளிக்கும் வரை அவர் சிறையில் தான் இருப்பார் என அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×