search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ம.பி: செல்பி மோகத்தால் ரெயில் பெட்டிகளை கொளுத்திய மாணவர்கள்
    X

    ம.பி: செல்பி மோகத்தால் ரெயில் பெட்டிகளை கொளுத்திய மாணவர்கள்

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் செல்பி எடுக்கும் மோகத்தால் மாணவர்கள் ரெயில் பெட்டிகளை கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    போபால்:

    இன்றைய தலைமுறையினர் அனைவரது கைகளிலும் ஆறாவது விரலாக ஸ்மார்ட் போன் இடம்பிடித்துள்ளது. அதில் செல்பி எடுத்து தங்களது வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்த புகைப்படங்களுக்கு எத்தனை லைக்குகள் விழுகிறது என்பதில் அனைவருக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    லைக்குகள் பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் துணிந்து செயலாற்றி வருகின்றனர். ஓடும் ரயில் முன் படமெடுப்பது, அடுக்குமாடி கட்டிடத்தில் நின்று போஸ் கொடுப்பது, விலங்குகளுடன் செல்பி எடுப்பது ஆகியவை
    அதிகரித்து வருகின்றன.

    இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பெட்டிகளுக்கு தீவைத்து செல்பி எடுக்க முயன்ற மாணவர்களின் செயல் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


     
    கடந்த 4ஆம் தேதி சூஷான் எக்ஸ்பிரஸ் ரெயில் குவாலியர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அன்றிரவு ரெயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதையடுத்து, ரெயில் நிலைய ஊழியர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதுதொடர்பாக, ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அவர்கள் ரெயில் நிலையத்தில் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் இரு மாணவர்கள் ரெயில் நிலையத்தில் நீண்ட நேரம் செலவழித்ததும், அவர்கள் ரெயில் பெட்டி அருகில் சென்றதும் பதிவாகி இருந்தது.

    இதைதொடர்ந்து, அந்த மாணவர்களை அழைத்து விசாரித்தனர். முதலில் முன்னுக்கு பின் முரணாக பேசிய மாணவர்கள், இறுதியில் நெருப்பின் பின்னணியில் செல்பி எடுப்பதற்காக ரெயில் பெட்டிகளுக்கு தீ வைத்ததை ஒப்புக்கொண்டனர்.இதனால் அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    வலைத்தளங்களில் லைக்குகள் பெறுவதற்காக, ரெயில் பெட்டிகளுக்கு தீவைத்த மாணவர்களின் செயல் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×