search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி. மருத்துவமனையில் கமிஷன் பிரச்சினையால் ஆக்சிஜன் வழங்குவது நிறுத்தப்பட்டது - சுகாதார மந்திரி ஒப்புதல்
    X

    உ.பி. மருத்துவமனையில் கமிஷன் பிரச்சினையால் ஆக்சிஜன் வழங்குவது நிறுத்தப்பட்டது - சுகாதார மந்திரி ஒப்புதல்

    உத்தரபிரதேசத்தில் குழந்தைகள் பலியான பிரச்சினையில் கமிஷன் பிரச்சினையால் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்குவது நிறுத்தப்பட்டது என்று மாநில சுகாதார மந்திரி ஒப்புக்கொண்டார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் குழந்தைகள் பலியான பிரச்சினையில் கமிஷன் பிரச்சினையால் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்குவது நிறுத்தப்பட்டது என்று மாநில சுகாதார மந்திரி ஒப்புக்கொண்டார்.

    உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் (பி.ஆர்.டி.) மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 நாட்களில் 63 குழந்தைகள் இறந்தன. இந்த பரிதாப சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் இறப்புக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது தான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    மருத்துவமனை நிர்வாகம் ஆக்சிஜன் வழங்கும் நிறுவனத்துக்கு ரூ.68 லட்சம் பாக்கியை தரவில்லை. அந்த நிறுவனத்துக்கும் மருத்துவமனை நிர்வாகத்துக்கும் இடையே கமிஷன் வழங்கும் பிரச்சினையால் இந்த தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக கடந்த 10-ந் தேதி அந்த நிறுவனம் ஆக்சிஜன் வழங்குவதை நிறுத்திவிட்டதாகவும் தெரிகிறது.



    ஆனால் கடந்த 4-ந் தேதி மருத்துவ கல்லூரி நிர்வாகத்தின் வங்கி கணக்கில் ரூ.1.86 கோடி இருப்பு உள்ளதும், மாநில அரசு ரூ.2 கோடி மருத்துவமனைக்கு வழங்கியிருப்பதும் தெரியவந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்த சம்பவத்துக்கு பின்னர் 11-ந் தேதி தான் அந்த தொகை ஆக்சிஜன் வழங்கும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

    அந்த சமயத்தில் சுமார் 2 மணி நேரம் ஆக்சிஜன் இல்லாமல் 33 குழந்தைகள் இறந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில், ஆக்சிஜன் வழங்குபவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் இடையே கமிஷன் பிரச்சினையால் தான் பாக்கி தொகை வழங்க தாமதம் ஆனதாகவும், இது தான் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு காரணம் என்றும் மாநில சுகாதாரத்துறை மந்திரி சித்தார்த்நாத் சிங் ஒப்புக்கொண்டார். அலகாபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-

    கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் வழங்குவது நிறுத்தப்பட்டதற்கு கமிஷன் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை தான் காரணம் என்று கூறப்படுவதை நான் மறுக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் குமார் தலைமையில் விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது. இதில் உண்மை என்னவென்று விரைவில் கண்டுபிடிக்கப்படும்.

    ஆக்சிஜன் வழங்குபவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் இடையே உள்ள ரகசிய தொடர்புகள் குறித்தும் விசாரிக்கப்படும். இதில் யாராவது குற்றம் செய்திருப்பது தெரியவந்தால் அவர்கள் நிச்சயம் தப்பிக்க முடியாது. நாங்கள் ஏற்கனவே இந்த பிரச்சினையில் முதற்கட்டமாக மருத்துவமனை முதல்வரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறோம்.

    குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை குறித்து நான் ஏற்கனவே தெரிவித்த கருத்தில் தவறான எண்ணமோ, இந்த அரசை காப்பாற்ற வேண்டும் என்பதற்கோ கூறியதல்ல. ஒரு மரணம் என்றாலும் அதில் இருந்து நாங்கள் ஓடி தப்பித்துக்கொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    (கடந்த சனிக்கிழமை அவர், 2014-16-ல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் அந்த மருத்துவமனையில் தினமும் சராசரியாக 22 முதல் 19 குழந்தைகள் இறந்துள்ளன. ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 11 நாட்களில் தினமும் சராசரியாக 10 குழந்தைகள் இறந்துள்ளன என்று கூறியது குறிப்பிடத்தக்கது)

    ஆனாலும் அவர், ஒரு குழந்தை கூட ஆக்சிஜன் பற்றாக்குறையால் சாகவில்லை என்ற அபத்தமான கூற்றை தொடர்ந்து கூறினார். வருகிற ஆண்டுகளில் மூளை அழற்சி நோயை தடுக்க எங்கள் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது என்றும் அவர் கூறினார்.

    இந்தநிலையில், கடந்த 12-ந்தேதியில் இருந்து நேற்று வரை அந்த மருத்துவமனையில் மூளை அழற்சி நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த 6 குழந்தைகள் இறந்தன.

    அதேசமயம் இதே காலகட்டத்தில் 21 புதிய நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களையும் சேர்த்து கோரக்பூர் மருத்துவமனையில் மூளை அழற்சி நோய்க்காக மொத்தம் 75 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
    Next Story
    ×