search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னட நடிகர் உபேந்திரா புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார்
    X

    கன்னட நடிகர் உபேந்திரா புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார்

    கன்னட திரைப்பட நடிகரும் இயக்குனருமான உபேந்திரா புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
    பெங்களூரு:

    கன்னட திரைப்பட இயக்குனரும் நடிகருமான உபேந்திரா (வயது 49) இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொதுமக்கள் முன்பெல்லாம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேரடியாக களத்தில் இறங்கி உடலை வருத்தி போராட்டங்கள் நடத்தினர். ஆனால், இப்போது அந்த நிலை மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சமுக ஊடகம் வாயிலாக தங்கள் கோரிக்கையை முன்வைத்து, கருத்துகள் மற்றும் ஆதரவைப் பெறுவதன் மூலம், கோரிக்கையை நிறைவேற்ற முடிகிறது.

    எனவே, மக்களுக்காக போராடுவதற்கு நான் புதிய அரசியல் கட்சியை தொடங்கவிருக்கிறேன். பண பலம் இல்லாமல் கட்சியைத் துணிச்சலுடன் இறங்கியிருக்கிறேன். இந்த கட்சியானது சாதி அடிப்படையிலோ அல்லது ஆள் பலத்துடனோ உருவானதல்ல. விரும்புபவர்கள் என்னுடன் இணையலாம். ஒத்த கருத்துடைய மக்களின் ஆலோசனைகளைக் கேட்டு, கட்சியின் பெயர் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்.

    நான் அரசியல்வாதி அல்ல, மக்கள் சேவகன். நான் தொழிலாளி. கட்சி நலனுக்காக பாடுபடுவேன். என்னுடன் இணைய விரும்புபவர்கள் ஒத்த கருத்துடையவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் காக்கி உடை அணிய வேண்டும். காவி உடை அணியக்கூடாது. காக்கி உடை தொழிலாளர்களின் அடையாளம். இந்த கட்சி மிகவும் வெளிப்படையாக செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும், கட்சியில் இணைவதற்காகவும் மூன்று இ-மெயில் முகவரிகளையும் உருவாக்கி உள்ளார் உபேந்திரா.
    Next Story
    ×