search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய பெண் அதிகாரி ரூபாவுக்கு டி.ஜி.பி. வக்கீல் நோட்டீஸ்
    X

    சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய பெண் அதிகாரி ரூபாவுக்கு டி.ஜி.பி. வக்கீல் நோட்டீஸ்

    சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் உள்பட பெங்களூரு சிறை முறைகேடுகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்த டி.ஐ.ஜி. ரூபாவுக்கு சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
    பெங்களூரு:

    சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் உள்பட பெங்களூரு சிறை முறைகேடுகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்த டி.ஐ.ஜி. ரூபாவுக்கு சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    அதில் 3 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.50 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார்.

    பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.



    இந்தநிலையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகள் உள்ளிட்ட முறைகேடுகளை துணிச்சலாக அம்பலப்படுத்திய டி.ஐ.ஜி. ரூபாவுக்கு கட்டாய விடுமுறையில் உள்ள சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவரது சார்பில் வக்கீல் ஆர்.ரமேஷ் என்பவர் இந்த நோட்டீசை அனுப்பி இருக்கிறார். அதில் கூறி இருப்பதாவது:-

    “தாங்கள் ஊடகங்கள் மூலம் எனது கட்சிக்காரரான சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு எதிரான தவறான தகவல்களை வெளியிட்டு அவருடைய நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்.

    மலிவான விளம்பரத்துக்காக தாங்கள் இவ்வாறு தவறான தகவல்களை வெளியிட்டு உள்ளர்கள். எனது கட்சிக்காரர் உங்களுக்கு ‘மெமோ’ அனுப்பிய பிறகு இவ்வாறு தாங்கள் செயல்பட்டு உள்ளர்கள். தாங்கள் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை. தாங்கள் சிறையில் சம்பந்தப்பட்ட தண்டனை கைதி(சசிகலா) அடைக்கப்பட்டுள்ள பகுதியில் நேரில் ஆய்வு செய்யவே இல்லை என்று என் கட்சிக்காரர் கூறுகிறார்.

    தாங்கள் எவ்வாறு ஊடகங்கள் மூலம் எனது கட்சிக்காரருக்கு எதிராக தவறான தகவல்களை வெளியிட்டீர்களோ அதேபோல் பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தாங்கள் கூறிய குற்றச்சாட்டுகள் பொய் மூட்டைகள் என்பதை உயர்மட்ட விசாரணை குழு அதிகாரியிடமும் கூறுவோம். அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்வோம்.

    சிறையில் தண்டனை பெற்ற குற்றவாளி ஒருவருக்கு தனி சமையலறை வசதி உள்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறி இருக்கிறீர்கள். அந்த ஆட்சேபனைக்குரிய விஷயங்களை நீங்கள் புகைப்படம் எடுப்பதை எப்படி தவறவிட்டீர்கள்? இப்போது ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக சொல்கிறீர்கள்.

    ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறி உள்ளர்கள். அந்த பணம் யார் கொடுத்தது, எங்கிருந்து வந்தது என்பது போன்ற விஷயங்கள் குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறையில் எனது கட்சிக்காரர் புகார் செய்ய உள்ளார். ஓய்வு பெறுவதற்கு சில நாட்கள் இருக்கும் நிலையில் தாங்கள் சில நோக்கத்திற்காக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எனது கட்சிக்காரருக்கு எதிராக கூறி இருக்கிறீர்கள்.

    எனவே தாங்கள் மன்னிப்பு கேட்பதால் எனது கட்சிக்காரருக்கு ஏற்பட்ட களங்கம் நீங்கிவிடாது. ஆயினும் 3 நாட்களுக்குள் தாங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் தங்கள் மீது ரூ.50 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்படும்.”

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×