search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனிதன் சாகலாம், ஆனால் நாய் காயமடையக் கூடாது: மேனகா காந்தியை வறுத்தெடுத்த சமாஜ்வாடி தலைவர்
    X

    மனிதன் சாகலாம், ஆனால் நாய் காயமடையக் கூடாது: மேனகா காந்தியை வறுத்தெடுத்த சமாஜ்வாடி தலைவர்

    சமாஜ்வாடி தலைவர் ராம் கோபால் யாதவ் இன்று மாநிலங்களவையில் பேசும்போது, மத்திய மந்திரி மேனகா காந்தி விலங்குகள் மீது காட்டும் பாசத்தை கடுமையாக விமர்சித்தார்.
    புதுடெல்லி:

    இயற்கை பேரழிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்து மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம் கோபால் யாதவ் பேசியதாவது:-

    நம் நாட்டில் ஒரு மந்திரி இருக்கிறார். அவர் விலங்குகளை கட்டிப் போடக்கூடாது என்று ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். பசுக்களையும் எருமைகளையும் வீடுகளில் கட்டிப்போடாமல் எப்படி பால் கறக்க முடியும் என்பது மக்களுக்கு புரியவில்லை. விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இனி பயிர்களை பாதுகாக்க வேண்டும் என்றால் விவசாயிகள் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். ஏனென்றால் புதிய உத்தரவுதான் காரணம்.

    வேலி அமைத்தால் அவர்களை போலீஸ் வந்து கைது செய்யும். ஏனென்றால் மேனகா காந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். மனிதன் சாகலாம், ஆனால் நாய் காயமடையக்கூடாது. இல்லையெனில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும்.

    கான் மார்க்கெட்டில் (மத்திய டெல்லி) தினமும் மக்களை நாய்கள் கடிக்கின்றன. நாய்கள் எல்லா இடங்களிலும் சுற்றித் திரிகின்றன. ஒரு கடைக்காரரிடம் நாய்களை ஏன் நீங்கள் விரட்டியடிக்கவில்லை? என்று கேட்டேன். அதற்கு அவர், மந்திரி அனுமதி அளிக்கமாட்டார் என்றார். விரட்டியடித்தால் வழக்கு போடுவார் என்றும் கூறினார்.



    மனிதன் இறப்பதும், விவசாயிகளின் பயிர்கள் சேதம் ஆவதும் அவருக்கு ஒரு விஷயமே இல்லை. ஆனால், உங்கள் பசுக்களையும் எருமைகளையும் கட்டி வைக்கக்கூடாது. இது துக்ளக் உத்தரவு தவிர வேறு ஒன்றும் இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் விவசாயிகளும் நாடும் எப்படி செழிப்படையும் என்பது வியப்பாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×