search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடும் கட்டுப்பாடுகள் எதிரொலி: சொகுசு வாழ்க்கை முடிந்தது - சசிகலாவுக்கு சிறை உணவு
    X

    கடும் கட்டுப்பாடுகள் எதிரொலி: சொகுசு வாழ்க்கை முடிந்தது - சசிகலாவுக்கு சிறை உணவு

    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இதர கைதிகளுக்கு அளிக்கப்படும் உணவு வகைகள்தான் தற்போது சசிகலாவுக்கும் அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    பெங்களூரு:

    சசிகலாவுக்கு சலுகை வழங்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

    தண்டனை கைதிகளுக்கு வெளியில் இருந்து வரும் உணவு பொருட்கள் மற்றும் மாத்திரைகள் அனுமதிக்கப்படவில்லை. விசாரணை கைதிகளுக்கு மட்டும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படுகிறது.

    கைதிகளை பார்க்க அவர்களது உறவினர்களுக்கு 20 நிமிடம் முதல் 40 நிமிடம் வரையே அனுமதி வழங்கப்படுகிறது.

    சில கைதிகளுக்கு மட்டும் வாரத்தில் 3 நாட்கள் உறவினர்களை பார்க்க அனுமதி உண்டு. சசிகலா போன்ற வி.வி.ஐ.பி. கைதிகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பார்வையாளரை அனுமதிக்க வேண்டும் என்று தற்போது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இனிமேல் சசிகலாவை அவரது உறவினர்களோ அல்லது வக்கீலோ 15 நாட்களுக்கு ஒருமுறை தான் சந்திக்க முடியும்.

    இதுவரை சசிகலாவை சந்தித்தவர்களின் பின்னணி விவரங்களை மத்திய உளவுத்துறை திரட்டி உள்ளது. இதில் ஒருமுறை சசிகலாவை கர்நாடக போலீஸ் மந்திரி பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷ் சந்தித்தபோது அவருடைய செல்போன் உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன.

    அப்போது அவர் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க உதவியது தெரியவந்தது. இதற்காக போலீஸ் மந்திரியின் பெயரை அவர் தவறாக பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.

    பரப்பன அக்ரஹார சிறையில் தற்போது கைதிகளுக்கு காலையில் எலுமிச்சை சாதமும், டீயும், மதியம் ராகி ரொட்டியும் தயிர் சாதமும், இரவு சாம்பார் சாதமும் வழங்கப்படுகிறது. வாரத்தில் ஒரு நாள் ஒரு நேரம் மட்டும் அசைவ உணவு வழங்கப்படுகிறது.

    கைதிகளுக்கு வழங்கப்படும் இந்த உணவுகளையே சசிகலாவும் சாப்பிடுகிறார். சிறை பெண் டாக்டரே அவரை பரிசோதனை செய்து அவருக்குள்ள உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதிக்கு மாத்திரைகளை வழங்குகிறார்.

    சசிகலா தினமும் யோகா பயிற்சி செய்கிறார். முன்பு சிறை வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொள்வார். தற்போது அவரது அறையிலேயே நடைபயிற்சி செய்து வருகிறார்.

    அவர் அடைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி உள்ள கண்காணிப்பு கேமராக்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. சசிகலாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்படுகிறது.

    சிறையில் என்ன நடக்கிறது என்ற விவரங்களை பெங்களூரு சேஷாத்திரி ரோட்டில் உள்ள சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மற்றும் டி.ஐ.ஜி. அறைகளில் இருந்து நேரடியாக பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறையில் கடந்த திங்கட்கிழமை முதல் எந்த விதிமுறை மீறல்களும் நடக்காமல் உள்ளன.

    வழக்கமாக சிறையில் உள்ள கைதிகளுக்கு பீடி, சிகரெட், கஞ்சா பொட்டலங்கள் அதிகளவில் கிடைக்கும். கடந்த திங்கட்கிழமை முதல் இதுவும் கிடைக்கவில்லை.

    முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தெல்கிக்கும் மற்ற கைதிகளுக்கும் செய்து கொடுக்கப்பட்டிருந்த வசதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    Next Story
    ×