search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் திருட்டை தடுக்க நவீன கருவி: சித்தூரில் சந்திரபாபுநாயுடு தொடங்கி வைக்கிறார்
    X

    ஆந்திராவில் திருட்டை தடுக்க நவீன கருவி: சித்தூரில் சந்திரபாபுநாயுடு தொடங்கி வைக்கிறார்

    ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு திருட்டை தடுக்கும் நவீன கருவி திட்டத்தை வருகிற 21-ந்தேதி சித்தூரில் அறிமுகம் செய்து தொடங்கி வைக்கிறார்.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் நவீன கருவியை பொருத்தி திருட்டுச் சம்பவத்தை கண்டுபிடிக்கும் திட்டம், சித்தூர் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு 21-ந்தேதி சித்தூர் மாவட்டத்துக்கு வருகை தருகிறார். அப்போது குப்பத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில், இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்து தொடங்கி வைக்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சித்தூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 50 ஆயிரம் வீடுகளின் உரிமையாளர்களுக்கு இந்தக் கருவி வழங்கப்பட உள்ளது. இந்தக் கருவியை வாங்க, சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் படிவங்கள் வழங்கப்படுகின்றன. அதனை, பொதுமக்கள் வாங்கி பூர்த்தி செய்து, படிவத்துடன் ஆதார் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றை இணைத்து வழங்கப்பட வேண்டும்.



    திருட்டை தடுக்க வீடுகளில் பொருத்தப்பட உள்ள நவீன கருவி.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து, சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு நவீன கருவி வழங்கப்படும். அந்தக் கருவியை அவர்கள் தங்களின் வீட்டின் பீரோக்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொருத்திக் கொள்ள வேண்டும். போலீசார் கொடுக்கும் அதற்கான எண்ணை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    இந்தக் கருவி செயல்படாமல் இருந்தாலும் பயப்பட தேவையில்லை. இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தால், அதன் பழுதை போலீசார் சரி செய்து விடுவார்கள். திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்து பீரோவை திறந்தாலும், உடைத்தாலும், அந்தக் கருவியில் இருந்து வீட்டின் உரிமையாளரின் செல்போனுக்கும், போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டுப்பாட்டு மையத்துக்கும் தகவல் கிடைத்து விடும்.

    அந்தத் தகவலின்படி போலீசார் முகவரியை கண்டு பிடித்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்று திருடர்களை எளிதில் பிடித்து விடலாம். இதன் மூலம் மாவட்டத்தில் திருடர்களும், திருட்டுச் சம்பவங்களும் ஒழிக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல ஆதரவு பெருகி வருகிறது. இந்தத் திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

    முதலில் சித்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இந்தக் கருவி பொருத்தப்பட உள்ளது. இதையடுத்து மந்திரி அமர்நாத் ரெட்டியின் வீட்டில் பொருத்தப்பட உள்ளது. கலெக்டர் பிரதியும்ணா தனது செல்போன் எண்ணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மேற்கண்ட திட்டத்தில் பதிவு செய்து கொண்டு ஆய்வு செய்தார்.



    Next Story
    ×