search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடனை கேட்டு அடித்ததால் அவமானம்: நடுரோட்டில் தீக்குளித்த பூக்கடை தொழிலாளி
    X

    கடனை கேட்டு அடித்ததால் அவமானம்: நடுரோட்டில் தீக்குளித்த பூக்கடை தொழிலாளி

    கடனை கேட்டு அடித்து, உதைத்த அவமானத்தில் பூக்கடை தொழிலாளி நடுரோட்டில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கடை வீதியில் நேற்று மதியம் ஒரு பூக்கடை முன்பு திடீரென சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.

    இதில் தீ மளமள என்று பரவியதால் வேதனை தாங்காமல் அவர் அலறி துடித்தார். பொதுமக்கள் நடமாட்டமுள்ள கடை வீதியில் இந்த சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைதொடர்ந்து தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அந்த நபரை பொதுமக்கள் மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் தீக்குளித்து தற்கொலை முயன்றவர் கண்டியூர் குளத்து தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 55). என்றும் பூக்கடையில் வேலை பார்த்து வந்தவர் என்று தெரியவந்தது.

    இதையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ராஜ்குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    ராஜ்குமார் திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் பூக்கடை நடத்தி வரும் சந்தோஷ் குமாரிடம் (31) வேலை பார்த்துள்ளார். கடந்த சில நாட்களாக ராஜ்குமார் வேலைக்கு செல்லவில்லை.

    இந்த நிலையில் சந்தோஷ் குமாரின் சகோதரர்களிடம் ராஜ் குமார் ரூ.20 ஆயிரம் வரை கடன் வாங்கியிருந்தார். வேலைக்கு வராமலும், கடனை திருப்பி கொடுக்காமலும் இருந்ததால் சந்தோஷ்குமாரின் சகோதரர்கள் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர். இது தொடர்பாக ராஜ்குமாரை அவர்கள் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவமானம் அடைந்த ராஜ்குமார், சந்தோஷ்குமாரின் பூக்கடை முன்பு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே ராஜ்குமார் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு கவலைக்கிடமான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
    Next Story
    ×