search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணத்தில் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக இன்று போராட்டம் நடத்தினார்கள்.
    X
    கும்பகோணத்தில் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக இன்று போராட்டம் நடத்தினார்கள்.

    பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்

    பஸ் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் 2-வது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #BusFareHike
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் பஸ் கட்டணம் கடந்த வெள்ளிக்கிழமை உயர்த்தப்பட்டது.

    அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் கட்டணத்தை இரு மடங்கு அளவுக்கு உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், ஓய்வூதிய நிலுவை தொகைகளை செலுத்தவும், புதிய பஸ்கள் வாங்கவும், கடன்களை அடைக்கவும் பஸ் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பஸ் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியது. கடந்த சனிக்கிழமை தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் பஸ் கண்டக்டர்களிடம் கட்டண உயர்வு தொடர்பாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் தமிழ்நாடு முழுவதும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் மாணவர்கள் சாலை மறியலையும் மேற்கொண்டனர்.

    மாணவர்கள் போராட்டம் நடத்திய போதும் தமிழக அரசு, பஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற போவதில்லை என்று அறிவித்துள்ளது. போக்குவரத்து கழகங்களை சீரமைக்க கட்டண உயர்வு அவசியம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை மாணவர்கள் ஏற்கவில்லை.

    இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். சில இடங்களில் மாணவர்கள் பஸ்களை சிறை பிடித்து எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

    புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை டவுன் போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், மீண்டும் பழைய பஸ் கட்டணத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் இன்று காலை திடீரென்று வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆரல்வாய்மொழியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் மனித சங்கிலியாக நின்று தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

    தஞ்சையில் இன்றும் குந்தவை நாச்சியார் கல்லூரி மாணவிகள் 2-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் வெளியே வந்தனர். பின்னர் கல்லூரி கேட் முன்பு அமர்ந்து பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற கோ‌ஷங்களை எழுப்பினர்.

    கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து இன்று கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர்கள் பகத், தங்கதமிழ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தின் போது உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். எம்.எல்.ஏ.க்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    வேலூர் ஓட்டேரியில் உள்ள அரசு முத்துரங்கம் கலைகல்லூரியில் மாணவர்கள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு திரண்டனர்.

    வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்.

    அங்கு உள்ள சாலையில் நின்று பஸ் கட்டண உயர்வை கண்டித்தும் உடனே புதிய கட்டணத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோ‌ஷம் எழுப்பினர்.

    இது பற்றி தகவல் அறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து மாணவர்கள், கல்லூரி வளாகத்துக்குள் சென்று தரையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.

    காட்பாடி சட்ட கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இதனால் சட்ட கல்லூரி அமைந்துள்ள சில்க்மில் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலை அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

    பழைய பஸ் நிலையத்தில் இந்திய மாணவர் சங்க ராஜபாளையம் தாலுகா செயலாளர் மாடசாமி தலைமையில் திரண்ட மாணவ, மாணவிகள் தங்கள் கல்லூரிக்கு செல்லும் அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.

    பஸ் நிலைய வளாகத்தில் அமர்ந்து அவர்கள் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மாணவ, மாணவிகள் போராட்டம் காரணமாக பஸ் நிலையத்தில் இருந்து எந்த பஸ்சும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் ராஜபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சேசு (வடக்கு), பவுல் ஏசுதாஸ் (தெற்கு) மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


    திண்டுக்கல்- நத்தம் சாலையில் ஆர்.எம்.டி.சி. காலனி பகுதியில் இன்று காலை கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் அரசு பஸ்களை சிறை பிடித்தும், பஸ்கள் முன்பு படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் யாரும் உடனடியாக அங்கு வரவில்லை. இதனால் போராட்டம் தொடர்ந்தது. காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்லும் சமயத்தில் போராட்டம் நடந்ததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    இருந்தபோதும் பஸ்களில் பயணம் செய்தவர்களும் இறங்கி வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு கூடியது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கட்டண உயர்வை எதிர்த்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களையும் மாணவர்களையும் நேரடியாக பாதிக்கும் இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். தமிழக அரசு இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காணாவிட்டால் தங்களது போராட்டம் தொடரும் என்றும் தமிழகம் முழுவதும் மீண்டும் மாணவர் போராட்டம் வெடிக்கும் எனவும் எச்சரித்தனர்.

    உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் தவமணி, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராமு தலைமையில் பஸ் மறியல் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் அனைவரை யும் கைது செய்தார்.

    புதுக்கோட்டை திலகர் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி உள்ளது. இங்கு கடலூர் மட்டும் அல்லாது விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் வந்தனர். காலை 10 மணியளவில் மாணவர்கள் சிலர் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் கோபியில் இன்று கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து இன்று கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற கோரியும் கோ‌ஷம் எழுப்பினர். பின்னர் மாணவர்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் செல்ல புறப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து மாணவர்கள் திடீரென சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த உதவி போலீஸ் கமி‌ஷனர் சுந்தரராஜன், மாணவர்களிடம் அனுமதியின்றி மறியல் செய்தால் கைது செய்வோம் என்றார்.

    இதனால் மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மாணவர் சங்க தலைவர் தினேசை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்றனர். அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் அவரை விடுவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மறியலை கைவிட்ட மாணவர்கள் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதே போல் கவுண்டம்பாளையம் கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதுப்பற்றி தெரியவந்ததும் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் துடியலூர் போலீசார் விரைந்து வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குழித்துறை, திருவட்டார், களியல், தெங்கம்புதூர் உள்பட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுவிட்லின், சூசைமரியான், மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான பாப்பன்குளம், திருப்பாச் சேத்தி, மடப்புரம், பூவந்தி, இடைக்காட்டூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மதுரை மற்றும் சிவகங்கை நகர்களுக்கு சென்று வருகின்றனர்.

    பஸ் கட்டண உயர்வால் அதிருப்தி அடைந்த பாப்பன்குளம் கிராம மக்கள் இன்று காலை மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் தமிழக அரசை கண்டித்தும், பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Tamilnews #BusFareHike
    Next Story
    ×