search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா கேட்கும் சாட்சி நகல்களை தர தயார்: விசாரணை ஆணையம் தகவல்
    X

    சசிகலா கேட்கும் சாட்சி நகல்களை தர தயார்: விசாரணை ஆணையம் தகவல்

    ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவுக்கு எதிராக விசாரணை ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ள சாட்சியங்களின் நகலை சசிகலாவுக்கு அளிக்க ஆணையம் தயாராக இருக்கிறது’ என்று விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தில் 120 பேர் புகார் மனுக்களும், 28 பேர் பிரமாண பத்திரமும் தாக்கல் செய்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானோர் தாக்கல் செய்த புகார் மனுக்கள் மற்றும் பிரமாண பத்திரங்களில் சசிகலாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் கடந்த மாதம் 21-ந் தேதி சம்மன் அனுப்பியது. இதற்கு முன்னதாக ஆணையத்தில் தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் சரவணன், எம்.ஜி.ஆர். -அம்மா-தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன், சகோதரர் தீபக் மற்றும் அரசு மருத்துவர்கள் என மொத்தம் 16 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அவர்களில் பலர் சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவில் சசிகலாவின் உறவினரான டாக்டர் சிவகுமார் இடம் பெற்றிருந்தார். அவர் நேற்று ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அளிக்கப்பட்டு இருந்தது. அதனடிப்படையில் நேற்று காலை 10.25 மணியில் இருந்து பகல் 1.50 மணி வரை நீதிபதியின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

    ஆனால் நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு அவரால் முறையாக பதிலளிக்க முடியாமல் அவ்வப்போது கண்ணீர் மல்க பதிலளித்துள்ளார். இதனால் நீங்கள் (டாக்டர் சிவகுமார்) சென்று விட்டு வரும் 22-ந்தேதி மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்க வாருங்கள் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    பின்னர் ஆணையத்திற்கு வெளியே வந்த டாக்டர் சிவகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து நீதிபதி பல்வேறு கேள்விகளை என்னிடம் கேட்டார். அதற்குரிய பதில்களை அளித்தேன். இதுதவிர ஒரு சில ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளேன். தேவைப்படும் ஆவணங்களை வழங்க மேலும் தயாராக இருக்கிறேன்.

    வழக்கு விசாரணையில் இருப்பதால் இதுதொடர்பாக விளக்கமாக தற்போது கூற இயலாது. வழக்கு முடிந்த உடன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து விசாரணை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-

    குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபரை விசாரணைக்காக அழைக்கும்போது, அதுவரை யார் யாரெல்லாம் அவருக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளார்களோ அந்த சாட்சியங்களின் நகலை குறுக்கு விசாரணை செய்வதற்கு ஏதுவாக குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆணையம் அளிக்க வேண்டும் என்று ஆணைய விதியில் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவிற்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளவர்களின் பெயர், அவர்கள் சாட்சியம் அளித்த தேதி, அவர்கள் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது புகார் மனுவா? அல்லது பிரமாண பத்திரமா? என்பது போன்ற விவரங்களை எனக்கு அளிக்க வேண்டும். ஆணையத்தில் எனக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களின் சாட்சிய நகல், சாட்சிகளின் வக்கீல் யார்? என்பது போன்ற விவரத்தையும் அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கும் பட்சத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறோம் என்று சசிகலா தரப்பினர் கூறி உள்ளனர். அதனடிப்படையில் சாட்சி நகலை சசிகலாவிற்கு அளிக்க ஆணையம் தயாராக உள்ளது. சசிகலாவின் வக்கீல் ஆணையத்தில் ஆஜரானால், சாட்சி நகலை அளிப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்படும்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

    Next Story
    ×