search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடியோ வெளியிட்டு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ்ணப்பிரியா கண்டனம்
    X

    வீடியோ வெளியிட்டு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ்ணப்பிரியா கண்டனம்

    ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்டதன்மூலம் வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்திருப்பதாக சசிகலாவின் உறவினர் கிருஷ்ணப்பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று வெளியிட்டார். அரசியல் உள்நோக்கத்துடன் இதனை வெளியிட்டிருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இது விதிமீறல் என்றும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் இந்த வீடியோவை ஒளிபரப்பவேண்டாம் எனவும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.



    இந்நிலையில், சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகளான கிருஷ்ணப்பிரியாவும், வீடியோ வெளியிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘டிடிவி உடன் இருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல்’ என்று  கிருஷ்ணப்பிரியா தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.

    இந்நிலையில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணப்பிரியா, இந்த வீடியோ தொடர்பாக விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
     
    இந்த வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 33 வருடங்களாக அம்மாவுடன் இருந்து அவரது சுக துக்கங்களில் பங்கெடுத்த சசிகலாவை கொலைகாரி என்றும், அம்மாவின் கையை எடுத்துவிட்டார், காலை எடுத்தார்கள் என்றும் பலர் பேசினார்கள். கொலைகாரி என்ற பழி வந்தபோதுகூட அம்மாவின் கண்ணியத்துக்கு இழுக்கு வரும் என்பதற்காக இந்த வீடியோவை அவர் வெளியிடவில்லை.

    விசாரணைக் கமிஷன் கேட்டால் கொடுப்பதற்காக வீடியோவை டிடிவி தினகரனிடம் சசிகலா வழங்கியிருந்தார். அவரிடம் இருந்த வீடியோ வெற்றிவேலுக்கு எப்படி போனது என்பது தெரியவில்லை. இனிதான் தெரியவரும். சசிகலாவின் அனுமதி இல்லாமல் இந்த வீடியோவை வெளியிட்டதன்மூலம் வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார்.

    இதுபற்றி தினகரனிடம் இதுவரை பேசவில்லை.  ஆனால், வீடியோ வெற்றிவேலிடம் எப்படி சென்றது? என்பது குறித்து அவரிடம் விளக்கம் கேட்பேன்.

    இந்த வீடியோவை எடுத்தது சசிகலா தான். ஜெயலலிதாவின் அனுமதியுடன் தான் இதை அவர் எடுத்தார். ஜெயலலிதா சிகிச்சை பெறும் போது அவரின் பின்னால் இருக்கும் கருவிகளை அவரால் திரும்பி பார்க்க முடியாததால் அவர் வீடியோ எடுக்கும்படி கூறி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×