search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேட்டில் கவர்னர் மவுனம் காப்பது ஏன்?: அன்பழகன் கேள்வி
    X

    மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேட்டில் கவர்னர் மவுனம் காப்பது ஏன்?: அன்பழகன் கேள்வி

    மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் கவர்னர் மவுனம் சாதிப்பது ஏன்? என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்புள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு புதுவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 105 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை நீக்க கோரி இந்திய மருத்துவ கழகம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த மாணவர்கள் சட்ட விரோதமாக சேர்க்கப்பட்டது எப்படி? மாணவர் சேர்க்கையில் அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தார்கள்? எவ்வளவு பணம் கை மாறியது? இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் கவர்னர் மவுனம் சாதிப்பது ஏன்?

    மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை சரியான பாதைக்கு செல்வதாக கவர்னர் கூறி உள்ளார். ஆனால், முதல்-அமைச்சர் நாராயணசாமி அரசு மருத்துவ கல்லூரியில் முறைகேடாக ஆட்கள் நியமனம் செய்யப்பட்டது குறித்துதான் சி.பி.ஐ. விசாரணை நடத்துவதாக கூறி உள்ளார். இதில் உண்மை எது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

    அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட பணம் இல்லை என்று அமைச்சர் கந்தசாமி பீதியை கிளப்புகிறார். ஜி.எஸ்.டி. வரியால் மாதம் தோறும் ரூ.40 கோடி இழப்பு ஏற்படுவதாக நாராயணசாமி கூறுகிறார். ஆனால், ரூ.20 கோடிதான் இழப்பு ஏற்படுகிறது. கேபிள் டி.வி. வரி, விற்பனை வரி ஆகியவற்றை சரியாக வசூலித்தாலே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடலாம்.

    புதுவை அரசு ஆஸ்பத்திரியில் 6 மாதமாக சி.டி. ஸ்கேன் சரியாக செயல்படவில்லை. அது போல் எம்.ஆர்.ஐ. ஸ்கேனும் 1½ வருடமாக இயங்கவில்லை. இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நோயாளிகள் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்படுகின்றனர். முதல்- அமைச்சர் நாராயணசாமி புதுவை நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×