search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒக்கி புயல் தாக்குதல்: 2 நாட்கள் கடலில் தத்தளித்தோம் - ஊர் திரும்பிய மீனவர்கள் பேட்டி
    X

    ஒக்கி புயல் தாக்குதல்: 2 நாட்கள் கடலில் தத்தளித்தோம் - ஊர் திரும்பிய மீனவர்கள் பேட்டி

    ஒக்கி புயல் தாக்குதலால் பேய் காற்று, கொந்தளிப்புக்கு மத்தியில் 2 நாட்கள் கடலில் தத்தளித்தோம் என்று ஊர் திரும்பிய மீனவர்கள் கூறினர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தை தாக்கிய ஒக்கி புயலால் மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தது. இன்று 6-வது நாளாக பல்வேறு கிராமங்கள் மின்சாரம் இன்றி தவிப்புக்குள்ளாகி உள்ளார்கள்.

    கடலில் சிக்கி பல மீனவர்கள் மாயமானார்கள். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் படகு சேதம் அடைந்து நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்த 21 குமரி மாவட்ட மீனவர்களை கடற்படையினர் மீட்டு கேரளாவுக்கு கொண்டு வந்தனர். அவர்கள் நேற்று இரவில் நாகர்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் 21 மீனவர்களும் கலெக்டரை சந்தித்தனர். பின்னர் அங்கிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நடுக்கடலில் சிக்கி தவித்தது குறித்து மீனவர் லூர்துதாசன் (வயது 58) கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் தேங்காய்ப்பட்டணம் கடற்கரையில் இருந்து அந்தோணிபிச்சை என்பவரது விசைப்படகில் கடந்த 28-ந்தேதி மாலை 6 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றோம். 29-ந் தேதி நள்ளிரவில் நடுக்கடலில் வலையை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது திடீரென புயல் காற்று வீசியது. கடல் கொந்தளித்தது. பேய்க்காற்றுக்கு வலைகள் சேதம் அடைந்தன. நாங்கள் சென்ற படகும் பலத்த சேதம் அடைந்தது. அங்கிருந்து எங்களால் படகை தொடர்ந்து இயக்க முடியவில்லை. இதனால் செய்வதறியாது நடுக்கடலில் தவித்துக் கொண்டு இருந்தோம். காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்ததால் உயிருடன் கரை திரும்ப முடியுமா? என்று சந்தேகமும் ஏற்பட்டது.

    இந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக மற்றொரு விசைப்படகு வந்தது. புயலில் நாங்கள் சிக்கி இருந்ததை அறிந்து, அந்த படகில் இருந்தவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் எங்கள் படகின் அருகில் வந்தனர். அப்போதுதான் அந்த படகு குமரி மாவட்டம் பூத்துறையை சேர்ந்த படகு என்று தெரியவந்தது. அதில் குமரி மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்களும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என மொத்தம் 9 பேர் இருந்தனர்.

    நகர முடியாமல் நின்று கொண்டிருந்த எங்கள் படகை கயிறு மூலம் அவர்களது படகில் கட்டி கரையை நோக்கி இழுத்து வந்தனர். ஆனால் வரும் வழியில் இன்னொரு படகும் சேதம் அடைந்து, தண்ணீரில் பாதி மூழ்கிய நிலையில் கடலில் மிதந்தது. அதன் அருகே குமரி மாவட்டத்தை சேர்ந்த 2 மீனவர்கள் தத்தளித்துக் கொண்டு இருந்தனர். உடனே அந்த 2 பேரையும் மீட்டுவிட்டோம்.

    இவ்வளவும் நல்லபடியாக முடிந்த நேரத்தில் எங்களை காப்பாற்றி கயிறு மூலம் இழுத்துச் சென்ற படகும் சற்று நேரத்தில் புயல் காற்றுக்கு சேதம் அடைந்து நின்றுவிட்டது. இதனால், மொத்தம் 21 மீனவர்களும் புயலில் சிக்கி கரை திரும்ப முடியாமல் 2 நாட்களாக நடுக்கடலிலேயே படகில் தவித்தோம்.

    எங்களின் நிலையை கடற்படைக்கு தெரிவித்தோம். அதன்பேரில் கடற்படை கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் வந்து 21 மீனவர்கள் மற்றும் படகுகளை பத்திரமாக மீட்டு, கேரள கடற்கரைக்கு நேற்று முன்தினம் கொண்டு வந்தனர். எங்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. உணவு, உடை ஆகியவையும் வழங்கப்பட்டன. அதன்பின்னர் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளின் பேரில் குமரி மாவட்டத்துக்கு திரும்பி இருக்கிறோம்.

    இவ்வாறு லூர்துதாசன் கூறினார்.



    Next Story
    ×