search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உறுதியான தகவலின்பேரில் சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் சோதனை: வருமான வரித்துறை விளக்கம்
    X

    உறுதியான தகவலின்பேரில் சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் சோதனை: வருமான வரித்துறை விளக்கம்

    உறுதியான தகவலின் அடிப்படையில் தான் சசிகலாவின் குடும்பத்தினர் வீடுகள் மற்றும் போயஸ் கார்டனில் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
    சென்னை:

    போலி நிறுவனங்கள் தொடங்கி, வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சசிகலாவின் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில்  வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு வார காலம் தீவிர சோதனை நடத்தினர். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் மற்றும் கோடநாடு எஸ்டேட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.



    இந்த சோதனையில் பல்வேறு போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். வருமான வரி சோதனையில் சிக்கியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் தூண்டுதல் காரணமாக சோதனை நடத்தப்பட்டதாக சசிகலா தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், சசிகலா, டிடிவி தினகரனின் உறவினர்களின் வீடுகள், அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-



    வரி ஏய்ப்பு குறித்து வருவாய் நுண்ணறிவு பிரிவு மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அதன் பிறகே சோதனை நடத்தப்பட்டது. உறுதியான தகவல்  மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் தான் சோதனை நடந்தது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் சசிகலாவின் 4 அறைகள் மற்றும் பூங்குன்றனின் ஒரு அறையில் சோதனை செய்யப்பட்டது. அந்த அறைகளின் சாவிகள் இளவரசியின் மருமகனான ராஜராஜனிடம் இருந்து பெறப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவின் அறையில் சோதனை நடத்தப்படவில்லை.

    தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த தொடர் சோதனையில் 70-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 17 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பென் டிரைவ்கள் மற்றும் லேப்டாப் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சோதனை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தேவையெனில்  நீதிமன்ற அனுமதி பெற்று சசிகலா மற்றும் இளவரசியிடமும் விசாரணை நடத்தப்படும்.

    தமிழக போலீசாரின் உதவியே போதுமானதாக இருந்ததால் சோதனையின்போது துணை ராணுவத்தை நாடவில்லை.

    இவ்வாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×