search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய்யை வளைத்து போட பா.ஜனதா முயலவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்
    X

    விஜய்யை வளைத்து போட பா.ஜனதா முயலவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்

    மெர்சல் பட விவகாரத்தின் மூலம் நடிகர் விஜய்யை வளைத்து போடுவதற்கு பாரதிய ஜனதா முயலவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆர்.கே.நகர் தேர்தலை எந்த வகையில் சந்திப்பது என்பது பற்றிய முடிவுகள் எல்லாம் எடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதை எப்படி எதிர்கொள்வது என்று திட்டமிட்டு செயல்படுவோம்.

    தமிழக மக்களிடையே நேர்மறையான அரசியலை பா.ஜனதா எடுத்துச் செல்லும். பிரதமர் மோடியின் திட்டங்கள் பல நிலைகளில் திரித்து கூறப்பட்டு மக்கள் முன்னால் நிலை நிறுத்தப்படுகிறது. அதில் உள்ள நல்ல தன்மைகள் ஏதாவது ஒரு வகையில் மறைக்கப்பட்டு விடுகிறது.

    பன்முக வரியை ஜி.எஸ்.டி. என்ற பெயரில் ஒரே வரியாக குறைத்திருக்கிறோம். ஆனால் ஏதோ வரி போட்டு விட்டார்கள் என்று தவறாக முன்னிறுத்தப்படுகிறது. ஜி.எஸ்.டி. என்பது மதிப்பு கூட்டு வரியல்ல. இது இந்த நாட்டின் வரி குறைப்பு நடவடிக்கை என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்.

    அரிசிக்கு வரி கிடையாது. பருப்புக்கு வரி கிடையாது. குளிர்சாதன ஓட்டலில் 18 சதவீதம் இருந்த வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 90 ரூபாய்க்கு வாங்கிய சாப்பாடு 68 ரூபாயாக குறைந்துள்ளது. வணிகர்கள் ஒரு தவறை செய்கிறார்கள். அவர்கள் இந்த ஜி.எஸ்.டி.யின் பலன் மக்களுக்கு கிடைக்க சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்காணிக்க வேண்டும்.

    வணிகர்களுக்கு இப்போது எவ்வளவோ சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கிறது. கணக்கு தாக்கலை கூட 3 மாதங்களுக்கு ஒரு முறை செய்தால் போதும் என்று அரசு கொண்டு வந்திருக்கிறது. இப்போது 27 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஜி.எஸ்.டி. கூட்டம் நடக்கும். என்னென்ன கோரிக்கை உள்ளதோ அதை வையுங்கள் என்றும் அரசு கூறியுள்ளது.


    நேற்று காங்கிரசை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் ஏற்கெனவே 5 ரூபாய் வரி கட்டியிருந்தோம். இப்போது 50 ரூபாய் வரி கட்டுகிறோம் என்கிறார். தயவு செய்து தவறான தகவல்களை மக்களுக்கு தர வேண்டாம். திரைப்படங்கள் கூட இதை தவறாக முன்னிறுத்துகிறது.

    மத்திய அரசின் நல்ல திட்டங்களை மக்களிடையே எடுத்து கூற தமிழக பா.ஜனதா கட்சி தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய இருக்கிறது. 53 லட்சம் பேர் முத்ரா கடன் வங்கியில் பிரதமரின் முயற்சியினால் கடன் பெற்றிருக்கிறார்கள். மீன் விற்பவர்கள், பூ விற்பவர்கள், காய் விற்பவர்கள் கடன் பெற்றுள்ளனர்.

    எனவே நல்லதை செய்துவிட்டு ஏன் நாங்கள் எதுவுமே செய்யாது போல ஒரு தோற்றத்தை கொண்டு வருகிறார்கள் என்றால் எல்லோருமே பா.ஜனதா கட்சியை பார்த்து பயப்படுகிறார்கள். எங்களது சபதம் எங்களது பணி ஒவ்வொரு நிமிடமும் இனிமேல் பிரதமரின் நல்ல திட்டங்களை மக்களுக்கு புரிய வைப்பதுதான். எதிர்ப்பு பிரசாரங்கள் மிக அதிகமாக போய்க் கொண்டிருக்கிறது.

    நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்று விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு பலர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதை முறியடிக்க பா.ஜனதா கட்சி திட்டங்களை மேற்கொள்ளும். பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. ஆனால் ஏழைகள் பயன்படுத்தும் அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லை என்பது பொது மக்கள் மத்தியில் மறைக்கப்படுகிறது. அதனால் தான் எங்களுக்கு கோபம் வருகிறது.


    நடிகர் விஜய்யை வளைத்து போடுவதற்காகத்தான் மெர்சல் படத்துக்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று திருமாவளவன் கூறுவது அவரது அனுபவத்தை காட்டுகிறது. ஒரு இடத்தை வளைத்து போட வேண்டும் என்றால் முதலில் திருமாவளவன் அவர்களைப் போய் மிரட்டுவார்.

    யாரையாவது வளைத்து போட வேண்டும் என்றால் முதலில் போய் அவர்களை மிரட்டுவார். முதலில் அவர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள். அவர்களின் அலுவலகம் இருக்கும் இடங்களில் இருந்து எல்லாவற்றையுமே வளைத்து போடுபவர்கள். அப்படி வளைத்து போடுபவர்கள் விஜய்யை நாங்கள் வளைத்து போடுவோம் என்று நினைக்கலாம். அப்படி எதுவும் இல்லை. அப்படி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

    விடுதலை சிறுத்தைகளுக்கு வேண்டுமென்றால் அப்படிப்பட்ட அவசியம் இருக்கும். நான் திருமாவளவனிடம் வெளிப்படையாக இன்னொரு கேள்வியை கேட்கிறேன். விஜய்யை வளைத்து போடுவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம் என்று சொல்கிறீர்களே. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றும் சொல்கிறீர்களே.

    அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நீங்கள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது அவர்களுக்கு என்று கொண்டு வந்த ஒரு திட்டத்தை சொல்லுங்கள் பார்ப்போம். ஆனால் நாங்கள் தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு மத்திய அமைச்சருக்கு இணையான ஒரு பதவியை கொடுத்திருக்கிறோம். மோடி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருக்கிறாரா, திருமாவளவன் ஆதரவாக இருக்கிறாரா என்பது இதில் புரியும்.

    நமது தொப்புள்கொடி சொந்தங்கள் இலங்கையில் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட போது ராகுல்காந்தி எங்கே போனார். நாட்டின் கலாச்சாரம், தமிழரின் கலாசாரத்தை நடிகர் விஜய்யின் படத்தை வைத்து பேசுகிறார்கள். நாங்கள் எங்கள் கோரிக்கையைத் தான் சொன்னோம்.

    ஆனால் இடையில் இதில் எவ்வளவோ பேர் புகுந்து விட்டார்கள். காங்கிரஸ் காலத்தில் 30 வருடங்கள் கழித்து ஒரு படம் வெளியே வந்தது. எமர்ஜென்சியை பற்றி வந்த படத்தை காங்கிரஸ் முடக்கியது. நாங்கள் அராஜகத்தில் ஈடுபடவில்லை.

    உங்களுக்கு ஒரு கருத்தை சொல்ல உரிமை இருந்தால் எதிர் கருத்து சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. அதற்காக எங்களை போன் நம்பரை கொடுத்து திட்ட சொல்கிறார்கள். நீட் நல்ல திட்டம் என்று திட்டு வாங்கித்தான் நான் நிரூபித்தேன்.

    திட்டங்கள் கொண்டு வரும் போது திட்டுக்களை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசவில்லை. படப்பெட்டியை பிடுங்கிக் கொண்டு பாம்பை தியேட்டருக்குள் விடவில்லை. விஜய் படம் மட்டுமல்ல தவறான கருத்துக்கள் எங்கே வந்தாலும் நாங்கள் கோரிக்கை வைப்போம்.

    மோடி இருப்பதால் தான் நாங்கள் தைரியமாக இருக்கிறோம் என்று ஒரு அமைச்சர் கூறுகிறார். மற்றொருவர் மோடி ஆட்டிப் படைக்கிறார் என்கிறார். அவரவர்கள் தேவைக்கு அவரவர் கருத்தை சொல்கிறார்கள்.

    நான் மெர்சல் படத்தை இணையதளத்தில் பார்க்கவில்லை. அந்த படத்தை இணைய தளத்தில் பார்த்ததாக எச்.ராஜா கூறுகிறார் என்று சொல்கிறீர்கள். அவரது கருத்தையும் நான் பார்க்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×