search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு கொசுக்கள் உருவாக காரணமாக இருந்த தனியார் நிறுவனங்களிடம் இருந்து ரூ.11 கோடி அபராதம் வசூல்
    X

    டெங்கு கொசுக்கள் உருவாக காரணமாக இருந்த தனியார் நிறுவனங்களிடம் இருந்து ரூ.11 கோடி அபராதம் வசூல்

    தமிழகம் முழுவதும் டெங்கு கொசுக்கள் உருவாக காரணமாக இருந்த தனியார் நிறுவனங்கள், கம்பெனிகளிடம் இருந்து ரூ.11 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
    சென்னை:

    தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகமாக இருந்தது. ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவு அனுமதிக்கப்பட்டனர்.

    காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை உடனுக்குடன் கண்டறிந்து அந்த பகுதிகளில் சுகாதார குழுவினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அங்குள்ள தேவையற்ற பொருட்களை அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இது தவிர அனைத்து அரசு ஆஸ்பத்திரியிலும் காய்ச்சல் வராமல் தடுப்பதற்காக நிலவேம்பு குடிநீரும் வழங்கப்படுகிறது.

    கொசு ஒழிப்பு பணியில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற அரசின் உத்தரவை தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் வருவாய் துறையினர் உள்ளிட்ட அரசின் மற்ற துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு சென்று சுகாதார நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறார்.

    திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்ற அவர் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்தார். காஞ்சீபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியிலும் டெங்கு பாதித்தவர்களை பார்வையிட்டார். காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-



    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மற்ற மாவட்டங்களிலும் காய்ச்சல் பாதிப்பு குறைந்து வருகிறது.

    திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் காய்ச்சல் பாதித்து 160 பேர் தினமும் அனுமதிக்கப்பட்டனர். இப்போது 99 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த 10 பேரில் ஒருவருக்கு மட்டும்தான் ரத்த கசிவு போன்ற டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.

    டெங்கு பாதித்தவர்களுக்கு உடலில் தட்டணுக்கள் குறைய வாய்ப்பு உள்ளது. அதனால் கூடுதலாக ‘செல் கவுண்டர்’ திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருக்கும் தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் வரையில் தமிழகம் முழுவதும் டெங்கு கொசுக்கள் உருவாக காரணமாக இருந்த தனியார் நிறுவனங்கள், கம்பெனிகளிடம் இருந்து ரூ.11 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×