search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலாவுடன் மீண்டும் தினகரன் சந்திப்பு
    X

    சசிகலாவுடன் மீண்டும் தினகரன் சந்திப்பு

    சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசி வீட்டில் நேற்றிரவு சசிகலாவை டிடிவி தினகரன் மீண்டும் சந்தித்து பேசியுள்ளார்.
    சென்னை:

    உடல்நலக்குறைவால் அவதிப்படும் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த 6-ந்தேதி குளோபல் ஆஸ்பத்திரியில் கல்லீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் வேகமாக குணமடைந்து வருகிறார்.

    சிறையில் இருந்து பரோலில் வந்துள்ள சசிகலா தி.நகரில் உள்ள இளவரசி மகள் வீட்டில் தங்கி கடந்த 3 நாட்களாக ஆஸ்பத்திரிக்கு சென்று நடராஜனை பார்த்து வருகிறார்.

    அரசியல் ரீதியாக யாரையும் பார்க்க கூடாது என்று சிறைத்துறை கடும் நிபந்தனை விதித்துள்ளதால் நேரடியாக யாரையும் அவர் சந்திக்கவில்லை.

    கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சசிகலாவின் உறவினர் என்பதால் அவர் சசிகலாவை தினமும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று வருகிறார்.

    டி.டி.வி.தினகரன் நேற்று திருச்சி சென்றுவிட்டார். இரவில் தான் சென்னை வந்தார். அதன்பிறகு அவர் தி.நகர் சென்று சசிகலாவை சந்தித்தார்.

    அப்போது அவர் அரசியல் தொடர்பாக பல்வேறு வி‌ஷயங்களையும் பேசியதாக தெரிகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு நவம்பர் 2-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள சூழலில் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை குறித்து சசிகலாவுடன் தினகரன் விவாதித்ததாக தெரிகிறது.

    முன்னதாக திருச்சியில் இருந்து சென்னை வந்த அவரை நிருபர்கள் சந்தித்து பேட்டி கண்டனர்.

    தற்போது நடைபெறும் துரோக ஆட்சியில் மக்களுக்கான சாதகமான முடிவுகள் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படுமா? என்று எல்லோரும் எதிர்பார்ப்பது போல் நானும் எதிர்பார்க்கிறேன்.

    இப்போது கூட்டப்படும் அமைச்சரவை கூட்டத்துக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர்களும் என்னைப் பற்றி பல்வேறு யூகத்துடன் பேசுவதாக நீங்கள் கூறுகிறீர்கள்.

    தமிழ்நாட்டில் சிலர் கோமாளித்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்லி நான் எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

    புரட்சித் தலைவி அம்மா வழி நடத்திய கட்சியில் தொண்டர்களாக இருப்பவர்கள் கடைசி வரை மனசாட்சியாக இருப்பார்கள்.

    சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இந்த அரசு நீண்ட நாட்களுக்கு தள்ளிப்போட முடியாது. கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு எப்படியும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். அப்போது எது உண்மையான ஆட்சி என்று மக்களுக்கு தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×